Home இந்தியா மகராஷ்டிராவில் பாஜக முதல்வர்! சிவசேனா அல்லது என்சிபி கட்சியுடன்  கூட்டணி ஆட்சி அமையலாம்!

மகராஷ்டிராவில் பாஜக முதல்வர்! சிவசேனா அல்லது என்சிபி கட்சியுடன்  கூட்டணி ஆட்சி அமையலாம்!

827
0
SHARE
Ad

மும்பாய், அக்டோபர் 19 – மகராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் படி 62 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. மேலும் 59 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது.

120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மகராஷ்டிராவில் அதிகத் தொகுதிகளை கொண்டுள்ள தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும். என்றாலும், 288 தொகுதிகளைக் கொண்டுள்ள அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு மற்றொரு கட்சியின் ஆதரவு தேவைப்படுகின்றது.

Sharath Pawar and Modi

#TamilSchoolmychoice

என்சிபி கட்சித் தலைவர் சரத்பவார் நரேந்திர மோடியுடன்….

இந்நிலையில், அடுத்த மகராஷ்டிரா முதல்வராக பாஜக கட்சியைத் சார்ந்தவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது.

பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அறைகூவல் விடுத்துள்ளார். இரண்டாவது பெரிய கட்சியாக மகராஷ்டிராவில் உருவெடுத்துள்ள சிவசேனா இதுவரையில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று, 23 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது.

சிவசேனா-பாஜக இடையில் ஏற்கனவே 25 ஆண்டுகால கூட்டணி நிலவி வந்தாலும், அக்டோபர் 15இல் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இரு கட்சிகளுக்கும் இடையில் தொகுதி உடன்பாடு முறிவு கண்டதால், அவை இரண்டும் தனித் தனியாக போட்டியிட்டன.

பாஜக-சிவசேனா இடையில் கூட்டணி ஏற்பட முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் அத்வானி. “சிவசேனா-பாஜக கூட்டணி முறியக் கூடாது என நான் விரும்பினேன். இருப்பினும் தேர்தல் முடிவுகளில் எனக்கு முழுத் திருப்திதான்” என அத்வானி தெரிவித்தார்.

இதற்கிடையில், மகராஷ்டிராவின் மற்றொரு முக்கிய அரசியல் தலைவரான சரத் பவாரின் என்சிபி (NCP) கட்சி, பாஜக ஆட்சி அமைய, எவ்வித நிபந்தனைகளும் இன்றி, வெளியில் இருந்து ஆதரவு தர, முன்வந்துள்ளது.

இதுவரையில் 28 தொகுதிகளில் வென்றுள்ள என்சிபி கட்சி, மேலும் 13 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது.

பாஜக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கான விடை நாளைக்குள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.