மும்பை, அக்டோபர் 23 – உலகத்திலேயே மதிப்பு வாய்ந்தது வைரம்தான். ஆனால் வைரத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பணக்காரர்கள் ஆனதாகவோ, வசதியாக இருப்பதாகவோ செய்திகள் வருவதில்லை.
இப்போது, தனது ஊழியர்களுக்கு 499 கார்கள், 200 இரு படுக்கை அறை கொண்ட வீடுகள் மற்றும் ஏராளமான நகைகளை தீபாவளி பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது சூரத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற வைர விற்பனை நிறுவனம்.
இதன் மூலம் அந்நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 1200 ஊழியர்கள் பலன் அடைந்துள்ளனர். “கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்திற்கு இந்த ஊழியர்கள் அளித்துள்ள அற்புதமான பங்களிப்பிற்காகவும், பணித்திறமைக்காகவும் இந்தப் பரிசுகளை அளித்துள்ளோம்,” என்கிறார் அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஞ்சீவ் தோலகியா.
இந்த முறை தீபாவளி வெகுமதியாக ரூ.50 கோடியை ஊழியர்களுக்கு அளித்துள்ள இந்நிறுவனம், இது வழக்கமாக அளிக்கப்படும் தீபாவளி ஊக்கத்தொகை தான் என்றும் கூறியுள்ளது.
கடந்த 1991ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்கிறது. 6 ஆயிரம் பேர் பணியாற்றும் இந்நிறுவனத்திற்கு பெல்ஜியம், ஹாங்காங் மற்றும் இங்கிலாந்திலும் கிளைகள் உள்ளன.
“ஊழியர்களின் தற்போதைய தேவைகளின் அடிப்படையில் தீபாவளி பரிசுகள் அளிக்கப்பட்டன. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு பரிசளிக்கப்பட்டது. சொந்த வீடு உள்ளவர்களுக்கு கார் பரிசளிக்கப்பட்டது. இரண்டும் உள்ளவர்களுக்கு நகைகள் அளிக்கப்பட்டன,” என்கிறார் சஞ்சீவ் தோலகியா.