இஸ்லாமாபாத், அக்டோபர் 28 – இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள பாகிஸ்தான் என்றைக்கும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு இரு நாடுகளின் எல்லையில் அமைதி திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் வணிகத் துறை அமைச்சர் குர்ராம் தாஸ்தாகிர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதில் வர்த்தகம் முக்கியப் பங்கு வகிக்கும். அதனை உணர்ந்து இந்தியா செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளான இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் தொடர்பாக போர் பதற்றம் நிலவி வருவதால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பாகிஸ்தான் வணிகத்துறை அமைச்சர் குர்ராம் தாஸ்தாகிர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற வர்த்தக ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாவது:-
”இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் வர்த்தகம் மேற்கொள்ள பாகிஸ்தான் அரசு விரும்புகின்றது. அண்டை நாடுகளுடன் அமைதியை நிலைநாட்ட வர்த்தகம் முக்கிய காரணியாக செயல்படும். அதனால் வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருகின்றது.”
“எனினும், எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றம் இந்தியாவுடனான வர்த்தகத்தை பாதித்துள்ளது. இந்த நிலை மட்டும் இல்லாமல் இருந்தால் மின் பற்றாக்குறையை தீர்க்க பாகிஸ்தான் இந்தியாவிடமிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்திருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.