புத்ராஜெயா, அக்டோபர் 28 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.
நாட்டில் பல்வேறு முக்கிய ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் காலை 6 மணி தொடங்கி நீதிமன்றத்தின் வாசலில் தயாராக இருந்தனர்.
எனினும், அவர்கள் 8.15 மணிக்கு மேல் தான் உள்ளே அனுமதிக்கப்படுவர் என்று கூறி காவல்துறை தடுப்புகளை அமைத்து இருந்தது.
சரியாக காலை 8 மணிக்கு 15 உள்ளூர் செய்தியாளர்கள் காவல்துறையிடம் தங்களது பெயர்களைப் பதிவு செய்து நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றனர்.
தற்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.
தலைமை நீதிபதி அரிபின் சஹாரியா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இந்த விசாரணையை நடத்தி வருகின்றது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ராவுஸ் ஷாரிப், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹமித் எம்போங் மற்றும் சுரியாடி ஹாலிம் ஓமார் மற்றும் அகமட் மாரூப் ஆகியோர் அந்த ஐந்து பேர் கொண்ட குழு ஆவர்.
இந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 5 வருட சிறை தண்டனையை எதிர்த்து அன்வார் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.