திறன்பேசிகளின் விற்பனை தொடர்பாக ஐடிசி நிறுவனம் நடத்தியுள்ள வருடாந்திர ஆய்வின் முடிவில், 2014-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் வழக்கம் போல் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. எனினும், சாம்சுங் நிறுவனம் வழக்கத்தை விட குறைந்த அளவே திறன்பேசிகளை ஏற்றுமதி செய்துள்ளது.
மூன்றாம் காலாண்டில், உலக அளவில் திறன்பேசிகளின் விற்பனையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களின் வளர்ச்சி, வெவ்வேறாக உள்ளது.
செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டின் முடிவில், சாம்சுங் நிறுவனம், வழக்கம் போல் முதலிடத்தை பிடித்து இருந்தாலும், அதன் வளர்ச்சி இறங்கு முகமாக உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டில், 85 மில்லியன் திறன்பேசிகளை ஏற்றுமதி செய்த சாம்சுங், இந்த வருடத்தில் 78.1 மில்லியன் திறன்பேசிகளை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் வளர்ச்சி 16.1 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சாம்சுங்குடன் ஆப்பிளை ஒப்பிடுகையில், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளின் வெளியீடு, ஆப்பிள் சந்தைகளை நிலை பெறச் செய்துவிட்டது.
மூன்றாவது இடத்தைப் பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பது ‘சியாவுமி’ (xiaomi) நிறுவனமாகும். கடந்த காலாண்டில் 5.6 மில்லியனாக இருந்த திறன்பேசிகளின் ஏற்றுமதி, இந்த காலாண்டில் 17 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டிற்கான இதன் வளர்ச்சி விகிதம் 211.3 சதவீதமாகும்.
நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் லெனோவா மற்றும் எல்ஜி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவை முறையே 16.9 மற்றும் 16.8 மில்லியன் திறன்பேசிகளை ஏற்றுமதி செய்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.