பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி தலைவரான இம்ரான் கான் மற்றும் மதகுரு தஹிருல் காத்ரி ஆகியோர் கடந்த மாதம் பிரமாண்ட போராட்டத்தை முன்னின்று நடத்தினர். அந்தப் போராட்டத்தின் 2-வது வாரத்தில் பயங்கர வன்முறைச் சம்பவம் வெடித்தது.
போராட்டக்காரர்கள், பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி நிறுவனமான பிடிவி மீது கடும் தாக்குதல் நடத்தினர். காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரையும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கினர். இதன் காரணமாக அவர்கள் மீது வன்முறையைத் தூண்டி விடுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு விசாரணையின் போது இம்ரான்கான் மற்றும் காத்ரி ஆகிய இருவரும் நேரில் வரவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். எனினும் அவர்கள் இருவரும் நேரில் வர வில்லை.
இதனால் நீதிபதி, இருவரையும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளார். மேலும், இருவருக்கும் பிணையில் வெளிவர முடியாத படி கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.