கோலாலம்பூர், நவம்பர் 15 – விவேகானந்தா ஆசிரமம் தொடர்பில் அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கான முன்னறிவிப்பு ஒன்றை (நோட்டீஸ்) அனுப்பியுள்ளது ஹிண்ட்ராப்.
தேசிய பாரம்பரிய மைய துறையின் ஆணையர் டாக்டர் ஜைனா இப்ராகிமுக்கு இந்த முன்னறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆசிரம விவகாரம் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“தேசிய பாரம்பரிய சின்னங்களுக்கான சட்டம் வழங்கி உள்ள அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தி ஆசிரமத்தை கையகப்படுத்த டாக்டர் ஜைனா தவறிவிட்டார். ஆசிரமத்தை பாரம்பரிய கட்டிடமாக அறிவிப்பதற்கான நோட்டீசுகளை வழங்கியதைத் தவிர அவர் வேறு என்ன நடவடிக்கை எடுத்தார் என்று விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஒருவேளை ஆசிரமத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க அதன் அறங்காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், ஆணையர் டாக்டர் ஜைனா இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அறங்காவலர்களின் எதிர்ப்பு சட்ட வரையறைக்கு உட்பட்டதா என்பதைக் கண்டறிந்திருக்க வேண்டும்,” என்று வேதமூர்த்தி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் ஆசிரமத்தை பாரம்பரிய கட்டிடமாக அறிவித்து, அதை அரசிதழில் வெளியிட வலியுறுத்தி ஆணையருக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“விவேகானந்தா ஆசிரமம் நாட்டின் பொக்கிஷம். ஆசிரமம் விவகாரம் என்பது பொதுநலம் சம்பந்தப்பட்டது. எனவே ஹிண்ட்ராப் மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கையில் பிற அமைப்புகளும் கைகோர்க்கக் கூடும்,” என்று வேதமூர்த்தி மேலும் கூறியுள்ளார்.