Home Featured நாடு “ஹிண்ட்ராஃப் தீவிரவாத அமைப்பா?” – வேதமூர்த்தி வேதனை!

“ஹிண்ட்ராஃப் தீவிரவாத அமைப்பா?” – வேதமூர்த்தி வேதனை!

809
0
SHARE
Ad

waytha - 450  x 225கோலாலம்பூர் – “ஹிண்ட்ராஃப் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் இதற்காக ‘ஐஎஸ்ஏ’ என்னும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் 22 மலாய் அமைப்புகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டது அக்கிரமம்- அபாண்டம் ஆகும். அதைவிட வேதனையானது, இதன் தொடர்பில் ஏனைய அரசியல்-சமூக இயக்கங்கள் அமைதி காப்பது” என்று ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் வேதமூர்த்தி வேதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இந்த நாட்டில் அரசியல் விழிப்புணர்வுக்காகவும் சமய நல்லிணக்கத்திற்காகவும் சமூக விழிப்புணர்வுக்காகவும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் ஹிண்ட்ராஃப் இயக்கமாகும்.”

#TamilSchoolmychoice

“கடந்த 2008-ம் ஆண்டில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்படுவதற்குக் காரணம் எங்களின் ஹிண்ட்ராஃப் இயக்கம்தான். நாங்கள் மட்டும் இல்லையானால், கடந்த 12-ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணி மறுமலர்ச்சி அடைந்திருக்காது. அத்துடன், தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை இழப்பதற்கும் அதற்கு அரசியல் கடிவாளம் போடப்பட்டதற்கும் ஹிண்ட்ராஃப் இயக்கம்தான் காரணம்.”

“அதைப் போல பேராக், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய முக்கியமான மாநிலங்களில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதற்கும் ஹிண்ட்ராஃப் இயக்கம் தான் ஆதாரமாகும். நாடு விடுதலை அடைந்தது முதலே, இறுமாப்புடன் நடந்து கொள்ளும் தேசிய முன்னணியில் இந்த அளவிற்கு சிறுமாற்றம் ஏற்பட்டதற்கும் ஹிண்ட்ராஃப் இயக்கம் தான் பங்களித்துள்ளது.”

“ஹிண்ட்ராஃப் இயக்கம் மட்டும் தோன்றி இருக்காவிட்டால், ஆலயங்கள் வகை தொகை இல்லாமல் தொடர்ந்து உடைபட்டுக் கொண்டிருக்கும். தடுப்புக்காவல் மரணங்களும் ஏகமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும். தமிழ்ப் பள்ளிகளுக்கு தேசிய முன்னணி சார்பிலும் மக்கள் கூட்டணி மாநில அரசுகளின் சார்பிலும் இப்படி மாறி மாறி மானியம் அளிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. ஆலய நிர்வாகங்களுக்கு பல மில்லியன் கணக்கில் நிதியும் கிடைத்திருக்காது.”

“இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் போராட்டமும் அதன் தொடர் நடவடிக்கையும்தான் என்பதை எவராவது மறுக்க முடியுமா? இப்பொழுது கூட, ஜாகிர் நாயக்கின் நடவடிக்கையால் நாட்டின் பாதுகாப்பிற்கும் நல்லிணக்கத்திற்கும் பங்கம் ஏற்பட்டுள்ளதையாவது யாரும் மாற்றிச் சொல்ல முடியுமா? அவருக்கு காதும் காதும் வைத்தாற்போல நிரந்தர குடியிருப்புத் தகுதி அளிக்கப்பட்டதை முதன்முதலில் இந்த நாட்டு மக்களுக்கு சொன்னது இதே இயக்கம்தான். இந்த ஜாகிர் நாயக்கிற்கு, இந்தியாவிலும் வங்காள தேசத்திலும் என்ன நிலை என்பதை சம்பந்தப்பட்ட 22 மலாய் அமைப்புகளும் இந்த நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டியது தானே?”

“அதை விடுத்து ஹிண்ட்ராஃப் இயக்கத்தைத் தடைசெய்ய வேண்டும் என்பது அபாண்டமும் அநியாயமும் ஆகும். குறிப்பாக, இந்நாட்டின் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பது புலனாகிறது. அதைவிட, இதைப் பார்த்துக் கொண்டு அமைதி காக்கும் அரசியல்-சமூக இயக்கங்களின் போக்கு வேதனைக்குரியது” என்று ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவரும், வழக்கறிஞரும் முன்னாள் துணை அமைச்சருமான வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.