கோலாலம்பூர் – சிரியாவில் மலேசிய ஐஸ் தீவிரவாதக் குழுவிற்குத் தலைவனாக இருந்து வந்த மலாக்காவைச் சேர்ந்த முகமட் வாண்டி மொகமட் ஜெடி மீது, சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலில் அவன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
முகமட் வாண்டியின் மனைவி நோர் மாஹ்முடா அகமட் (வயது 28) தனது பேஸ்புக் பக்கத்தில், “அன்பு வீரனே.. இறுதியில் நீ போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. இங்கேயே நான் இருந்து, நீ விட்டுச் சென்ற பொறுப்புகளைக் கவனித்துக் கொள்கிறேன். எனினும், எனது இதயம் நான் எதிர்பார்த்ததை விட பலமாக இல்லை. இதை விதி என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று எழுதியிருக்கிறார்.
இதனிடையே, வாண்டிக்கு எந்த நேர்ந்தது? என்பதை அறிய மலேசியக் காவல்துறை அனைத்துலகக் காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சிரியாவில் அவன் மீது சிறிய இரக விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது உறுதியாகியிருக்கிறது என்றும் மலேசியக் காவல்துறையின் சிறப்புப் பிரிவு இயக்குநர் மொகமட் ஃபுசி ஹாருன், ‘தி மலாய் மெயிலிடம்’ தெரிவித்திருக்கிறார்.
மேலும், இத்தாக்குதலில் வாண்டி கொல்லப்பட்டானா? அல்லது காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கிறானா? என்பதை அறியவும் காவல்துறை முயற்சி செய்து வருவதாகவும் மொகமட் ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.