கோலாலம்பூர் – பெர்லிஸ் முப்தி மொகமட் அஸ்ரி சைனுல் அபிடின், இந்து தெய்வமான சக்தியை சிறுமைப்படுத்திப் பேசும் காணொளி ஒன்று அண்மையில் நட்பு ஊடகங்களில் பரவி, மலேசியாவில் வாழும் இந்துக்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இதனை ஹிண்ட்ராப் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதோடு, பெர்லிஸ் முப்தியின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
பரமசிவன் தொலைவில் தியான நிலையில் இருந்த பொழுது, பார்வதி தேவி மாற்றானுடன் இருந்ததாகவும், அதனால் தான் கணேசக் கடவுள் தோன்றினார் என்றும் அந்தக் காணொளியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கும் பெர்லிஸ் முப்திக்கு எதிராக, பேஸ்புக்கில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், இதன் தொடர்பில் விவாதிக்கவும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்-கொள்ளவும் குறிப்பாக மலேசியவாழ் இந்துப் பெருமக்களுக்கு பொருத்தமான செயல் நடவடிக்கையைத் தீட்டவும் ஹிண்ட்ராப் இன்று புதன்கிழமை இரவு 8 மணியளவில் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
கூட்டம் குறித்த விவரங்கள்:-
நாள் : மே 3, 2017
நேரம் : இரவு 8:00 மணி
இடம் : ஹிண்ட்ராப் மாநாட்டு அரங்கம், 10-ஆவது மாடி, 10 மெனாரா செண்ட்ரல் விஸ்தா, பிரிக் பீல்ட்ஸ், கோலாலம்பூர்.
இந்த அவசரக் கூட்டம் தொடர்பில் மேல் விவரத்திற்கு கண்ணனை (012-269 0024) தொடர்பு கொள்ளலாம்.