Home நாடு என்னைப் போல் அன்வாரும் விடுவிக்கப்படுவார் – தியான் சுவா நம்பிக்கை

என்னைப் போல் அன்வாரும் விடுவிக்கப்படுவார் – தியான் சுவா நம்பிக்கை

463
0
SHARE
Ad

Tian Chua கோலாலம்பூர், நவம்பர்  16 – தேச நிந்தனை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் தன்னை விடுதலை செய்ததன் மூலம் நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படுவது உறுதியாகி இருப்பதாக பிகேஆர் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினரான தியான் சுவா (படம்) கூறியுள்ளார்.

இதேபோல் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் விடுவிக்கப்படுவார் எனும் நம்பிக்கை பிறந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை  எதிர்த்து செயல்பட்ட போதிலும், தம்மை விடுவித்திருப்பதன் மூலம் நீதிமன்றங்கள் நடுநிலையுடன் செயல்படுவது தெரிய வந்துள்ளது என்று பிகேஆர் உதவித் தலைவரான அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“எனது வழக்கின் தீர்ப்பானது சரியான பாதையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் அடியாகும். இதேபோன்ற தைரியமும் நடுநிலையும் அன்வார் வழக்கை கையாளும் நீதிபதிகளாலும் பின்பற்றப்படும் என நானும் அன்வாரின் ஆதரவாளர்களும் நம்புகிறோம்,” என்றார் தியான் சுவா.

#TamilSchoolmychoice

தம் மீதான குற்றச்சாட்டு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், தனக்கு சாதகமாகவும் எதிராகவும் ஏராளமான கருத்துக்கள் வெளிப்பட்டதாக கூறினார்.

“உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி உட்பட அம்னோ உறுப்பினர்களின் அன்றாட தாக்குதல் தான் என்னை மிகவும் பாதித்தது. என்னைப் போல் வேறு எவரும் இந்த அளவு சிரமங்களை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்,” என்று தியான் சுவா மேலும் வேதனையுடன் தெரிவித்தார்.

அன்வார் இப்ராகிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின் மேல்முறையீடு விவாதங்கள் கூட்டரசு நீதிமன்றத்தில் முடிவுற்று, தீர்ப்பு நீதிபதிகளால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.