சென்னை, நவம்பர் 17 – நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்றும் இயக்குனர் அமீர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
லிங்கா பாடல் வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசியபோது, அரங்கில் கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் விசிலடித்து, கைதட்டி உற்சாகமாக ஆர்ப்பரித்தனர்.
“நீங்கள் முதல்வராக வேண்டும் சார். இங்கே நீங்கள் பார்க்கிற சில ஆயிரம் பேர் மட்டும் இப்படிக் கேட்கவில்லை. வெளியில், இந்த தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பேரும் இப்படித்தான் சார் ஆசைப்படுகிறார்கள்.
30 ஆண்டுகளாக உங்க மேல மட்டும்தான் தமிழக மக்கள் இப்படியொரு நம்பிக்கையை வச்சிருக்காங்க. இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் கூட தமிழக மக்களுக்கு நான் எதாவது செய்யணும்னு சொல்றீங்க.
அதையேதான் நானும் சொல்றேன். அதுக்கான காலமும் கனிந்து வந்திருப்பதாக கடவுள் மேலேயிருந்து சொல்றார். நீங்க அரசியலுக்கு வரணும்னு இந்த நாடே ஆசைப்படுது,” என்றார் அமீர்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தால் ஒட்டுமொத்த தமிழகமும் அவர் பின்னால் வரும் என்று குறிப்பிட்ட அவர், அரசியல் ரீதியிலான விமர்சனங்களை ரஜினி இனி சட்டை செய்யக்கூடாது என்றார்.
“ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகப் பேசலாம். நீங்கள் பார்க்காத விமர்சனமா..? தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென நினைத்தால் களமிறங்குங்கள். நாங்கள் எல்லாரும் அப்படியே உங்கள் பின்னால் வருகிறோம்.”
“என் வாழ்நாளில் தலைவர் என யார் பெயரையும் உச்சரித்ததில்லை. முதல் முறையா சொல்கிறேன், அரசியலுக்கு வரத் தகுதியான இடத்தில் உள்ள, இந்த மக்களை வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் நீங்கள்தான்,” என்றார் அமீர்.