புதுடெல்லி, நவம்பர் 17 – இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் தொடர்ச்சியான வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றது. சன் தொலைக்காட்சி அதிபர் கலாநிதி மாறன் (படம்) இதன் பெரும்பான்மை உரிமையாளராவார்.
விமான நிறுவனத்தின் எதிர்காலம், நிச்சயமற்ற சூழலில் உள்ளதால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 40 விமானிகள் தங்கள் பணியை விட்டு விலகிச் சென்றுள்ளனர்.
இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், 5-வது காலாண்டில் 50.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இது கடந்த ஆண்டு, ஏற்பட்ட வருவாய் இழப்பைக் காட்டிலும் குறைவு என்றாலும், தற்போதய நெருக்கடி நிலையை சமாளிக்கும் அளவிற்கு போதுமானதாக இல்லை. வருவாய் இழப்பை ஈடுகட்ட விமான நிறுவனம் அதிரடி விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளது. இருக்கை ஒன்றிற்கு 7 சதவீதம் அளவிற்கு விலையைக் குறைத்துள்ளது.
இது பற்றி விமான நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி சஞ்சீவ் கபூர் கூறுகையில், ” ஸ்பை ஸ் ஜெட்-ஐ மீண்டும் வெற்றிப் பாதைக்கு பயணிக்க வைக்க கூடுதல் நிதியும், சிறிது கால அவகாசமும் தேவைப்படுகின்றது. வருவாயில் மீண்டும் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை நிர்வாகத்திடம் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட்டின் விமானிகள், எதிர்காலம் கருதி தொடர்ச்சியாக தங்கள் பணியை இராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த 6 மாதத்தில் மட்டும் 40 விமானிகள் பணியை விட்டு விலகிச் சென்றுள்ளனர்.
இது பற்றி அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஸ்பை ஸ் ஜெட் தொடர்ச்சியான கால இடைவெளிகளில் தங்கள் விமான குழுவினரை இழந்து வருகின்றது. விமானிகளில் பெரும்பாலானோர் துணிந்து ஒரு வாய்ப்பினை எடுக்க முன்வருவதில்லை. குறிப்பாக கிங்பிஷர் ஏர்லைன்ஸிற்கு ஏற்பட்ட நிலையைத் தொடர்ந்து விமானிகள் மத்தியில் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே தங்கள் பணியை இராஜினாமா செய்து வருகின்றனர். இது எங்களுக்கு மேலும் நெருக்கடி தருகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.
விமானிகளின் பணி விலகல் காரணமாக, விமானங்களை இயக்க கால தாமதம் ஏற்படுவதாகவும், பல சமயங்களில் இதன் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.