பிரிஸ்பேன், நவம்பர் 17 – குழந்தைகள் தினத்தன்று பிரிஸ்பேனில் இந்திய பள்ளி குழந்தைகளை சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது ஒரு மாணவி, தமிழில் மோடிக்கு வணக்கம் கூறி வரவேற்றுள்ளார்.
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, முதலில் மியான்மர் சென்று பின் அங்கிருந்து பிரிஸ்பேனுக்கு நவம்பர் 14-ஆம் தேதி சென்றார். நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினம் என்பதால் அதனை பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாட திட்டமிட்டார் மோடி.
ஆனால், மோடியின் நிகழ்ச்சி நிரலில் அத்தகைய திட்டம் எதுவுமில்லை. ஆனபோதும், பிரதமரின் விருப்பப்படி பிரிஸ்பேனில் உள்ள இந்தியப் பள்ளி ஒன்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுடன் மட்டும் மோடி கலந்துரையாட அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, ஜி20 மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள பல்கலைகழகத்தில் இந்திய குழந்தைகள் சிலரை சந்தித்த மோடி, அவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடினார்.
மோடியை சந்திப்பதற்காக அழைத்து வரப்பட்ட குழந்தைகளில் தமிழ் பேசும் மாணவியும் ஒருவர் இருந்துள்ளார். அம்மாணவி மோடியை, ‘வணக்கம்’ எனக் கூறி தமிழில் பேசி வரவேற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.