Home நாடு டி.மோகனின் வெற்றி விழாவாக மாறப்போகும் ‘மஇகா எதிர்கால சவால்கள்’ கருத்தரங்கம்!

டி.மோகனின் வெற்றி விழாவாக மாறப்போகும் ‘மஇகா எதிர்கால சவால்கள்’ கருத்தரங்கம்!

642
0
SHARE
Ad
Dato T.Mohan former Youth leader
டத்தோ டி.மோகன்

கோலாலம்பூர், டிசம்பர் 6 – முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டபடி முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையில் இன்று சனிக்கிழமை மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகின்றது, ‘மஇகாவின் எதிர்கால சவால்கள்’ என்ற கருத்தரங்கம்.

நாடு முழுமையிலும் இருந்து பல மஇகா தலைவர்களும், தொகுதிக் காங்கிரஸ் பிரதிநிதிகளும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று சங்கப் பதிவதிகாரி மஇகாவுக்கு மறு தேர்தல் என அறிவிக்கும் கடிதம் ஒன்றை மஇகா தலைமையகத்திடம் எதிர்பாராதவிதமாக சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இன்று நடைபெறப்போகும் இந்த கருத்தரங்கம், மறு தேர்தல் கோரி இதுநாள் வரை சலிக்காமல் போராட்டம் நடத்தி வந்த டி.மோகன் தலைமையிலான குழுவினரின் வெற்றி விழாவாகவே மாறிவிட்டது.

#TamilSchoolmychoice

மஇகாவுக்கு மறு தேர்தல் வராது என உறுதியோடு பலர் கூறிக் கொண்டிருந்தனர். வேறு சிலரோ தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சி என்பதாலும், அதனால் பிரதமரின் தலையீடு இருக்கும் என்பதாலும், மறுதேர்தல் குறித்து அவநம்பிக்கை கொண்டிருந்தனர்.

மோகனின் நம்பிக்கையோடு கூடிய போராட்டம்

ஆனால் ஒருவர் மட்டும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு துணிச்சலுடனும், அதே நேரத்தில் விடாப்பிடியாகவும், தொடர்ந்து ஒரு குழுவை அமைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வந்தார்.

அவர்தான், டத்தோ டி.மோகன்!

t-mohanதனது நடவடிக்கைகளால் மஇகா தலைமைத்துவத்தின் வெறுப்புக்கு ஆளாகும் சூழ்நிலை இருந்த போதும், அதனையெல்லாம் பொருட்படுத்தாது,

பல கூட்டங்கள், சந்திப்புகள் என நடத்தி கடந்த ஓர் ஆண்டாக இந்த மறு தேர்தல் விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருந்ததில் டி.மோகனுக்கு முக்கிய பங்குண்டு.

அவருடன் இணைந்து மறுதேர்தல் கோரிக்கைக்காக, டத்தோஸ்ரீ வேள்பாரி, (அம்பாங்) டத்தோ முனியாண்டி, மது மாரிமுத்து, செனட்டர் விக்னேஸ்வரன், அம்பாங் ஜேம்ஸ் காளிமுத்து,  என பலரும் மோகனின் குழுவில் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

முன்னாள் இளைஞர் பகுதித் தலைவரான டி.மோகன், இளைஞர் பகுதியை ஒரு வலுவுள்ள அமைப்பாக உருவாக்கி, அதற்குத் தலைவராக, தனது தலைமையின் கீழ் செயலாளராகப் பணியாற்றிய சிவராஜாவை நியமித்து விட்டு, கடந்த ஆண்டு நடைபெற்ற மஇகா தேர்தல்களில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும், தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து சங்கப் பதிவதிகாரிக்கு எதிரான போராட்டத்தை கடந்த ஓராண்டாக முன்னின்று நடத்தி வந்தார்.

பிரதமர் அலுவலகம் முன் உச்சகட்டப் போராட்டம்

IMG_5109
அக்டோபர் 16ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டபோது….

அவரது குழுவினரின் போராட்டத்தின் உச்ச கட்டமாக அமைந்தது, புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தின் முன் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஏறத்தாழ ஆயிரம் பேரைத் திரட்டி அவர் நடத்திய ஆர்ப்பாட்டம்.

அப்போது  மறு தேர்தல் குறித்து சங்கப் பதிவதிகாரி தனது முடிவை அறிவிக்க வேண்டும் எனக் கோரும் கோரிக்கை மனுவும் பிரதமர் அலுவலகத்தில் மோகன் தலைமையிலான போராட்டக் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று, தெரிந்தோ தெரியாமலோ, ‘மஇகாவின் எதிர்கால சவால்கள்’ என்ற ஒரு பொருத்தமான கருத்தரங்கத்தை மஇகாவினருக்காக ஏற்பாடு செய்திருந்தார் டி.மோகன்.

காலம் செய்த கோலம் – நேற்று பார்த்து சங்கப் பதிவதிகாரி மறுதேர்தலுக்கான கடிதத்தை வழங்க –

உண்மையிலேயே மஇகாவின் எதிர்கால சவால்கள் என்ன என்பதை ஒவ்வொரு மஇகா உறுப்பினரும் இன்றைக்கு சிந்தித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் – இந்தக் கருத்தரங்கமும் நடைபெறுகின்றது.

டி.மோகனின் போராட்டக் குழுவினரின் வெற்றி விழாவாக – யாரும் எதிர்பாராத ஒரு பொருத்தமான நிகழ்வாக – இன்றைய ‘மஇகாவின் எதிர்கால சவால்கள்’ கருத்தரங்கம் அமைந்து விட்டது.