லாகூர், டிசம்பர் 6 – ஜம்மு காஷ்மீர் மக்களும், பாகிஸ்தானியர்களும் ரத்த சகோதரர்கள். இந்தியாவிடமிருந்து ஜம்மு காஷ்மீருக்கு விடுதலை பெற்று தருவோம் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமா உத் தவா தீவிரவாதி ஹபீஸ் சயீத் கூறியுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஜமா உத் தவா அமைப்பின் தீவிரவாத தலைவர்களுள் ஒருவரான ஹபீஸ் சயீத் தனது இயக்கத்தின் 2 நாள் மாநாட்டை லாகூரில் தொடங்கி உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் ஹபீஸ் சயீத் கூறியதாவது:- “பாகிஸ்தான் அல்லாவின் தேசம். இங்கே இனம், மொழியின் பெயரால் எந்த ஒரு பிரிவினைவாதத்தையும் நாம் அனுமதிக்கக் கூடாது”.
“இதனை இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து நமது நாட்டில் செய்து வருகின்றன. அந்நாடுகளை நாம் வன்மையாக எதிர்ப்போம். பாகிஸ்தானில் வாழும் அனைவரும் அனைத்து வேறுபாடுகளையும் மறந்துவிட்டு ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம்.”
“ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள், பாகிஸ்தானின் ரத்த சொந்தங்கள். அவர்களை நம்மிடமிருந்து பிரித்துவிட முடியாது. ஜம்மு காஷ்மீரை நாம் விடுதலை செய்வோம்.”
“1971-ம் ஆண்டு பாகிஸ்தானை துண்டாடிய காரணத்திற்காக, இந்தியாவை நாம் பழிதீர்ப்போம். பாகிஸ்தானில் இனியும் தற்கொலைப் படை தாக்குதல்கள், உயிரிழப்புகளை அனுமதிக்க கூடாது. வன்முறை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தடைபடுவதற்கு, ஹபீஸ் சயீத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதும் ஒரு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.