கிரீஸ், டிசம்பர் 29 – கிரீஸ் நாட்டிலிருந்து இத்தாலி செல்லும் வழியில் நடுக்கடலில் தீப்பிடித்துக் கொண்ட ‘நோர்மன் அட்லாண்டிக்’ பயணிகள் படகு விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் எஞ்சிய பயணிகள் அனைவரும் பத்திரமாக, காப்பாற்றப்பட்டனர். இந்தப் படகில் மொத்தம் 478 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இத்தாலிய கடற்படையின் ஹெலிகாப்டர்கள் இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டு, ஒருவர் ஒருவராக ஆகாய வழியாக தூக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டனர். சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான மீட்புப் பணியாக இது கருதப்படுகின்றது.
கடுங்குளிர், பலத்த காற்று இவற்றுக்கிடையில் பயணிகளும், மீட்புக் குழுவினரும் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.
தீப்பிடித்த படகிற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல்களும் மீட்புப் பணியில் உதவி புரிந்தன. படகில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் உடனடியாக அருகில் இருந்த சரக்குக் கப்பல்களுக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர்.
ஒரு சரக்குக் கப்பல் தனது முயற்சியில் 49 பயணிகளைக் காப்பாற்றியது.
காப்பாற்றப்பட்ட பயணிகள் அனைவரும் தென் இத்தாலியில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர்.