கோலாலம்பூர், ஜனவரி 13 – புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட டத்தோ குமார் அம்மான் மஇகா தலைமையகத்தில் கொண்டுவந்த ஒரு புதிய பாதுகாப்பு நடைமுறை எதிர்பாராதவிதமாக விஸ்வரூபம் எடுத்து வேறு திசையில் சென்று விட்டது.
இனிமேல் மஇகா தலைமையகத்திற்குள் வருபவர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்பட்டே கட்டிடத்திற்குள் நுழைய முடியும் என்ற விதிமுறைகள் குமார் அம்மனால் அறிவிக்கப்பட்டவுடனேயே அதனை எதிர்த்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
கடந்த சில வாரங்களாக பல பத்திரிக்கை சந்திப்புகள் – அதிலும் குறிப்பாக மஇகா தேசியத் தலைவர் பழனிவேலுவுக்கு எதிரான ஒரு சிலரின் பத்திரிக்கை சந்திப்புகள் – மஇகா தலைமையகத்திலேயே நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
மஇகா தலைமையகத்தில் எம்.ஐ.இ.டி அலுவலகம் ஒரு மாடியிலும் மஇகாவின் சமூக அறவாரியம் இன்னொரு மாடியிலும் இயங்கி வருகின்றன. டத்தோஸ்ரீ பழனிவேலு தலைமையிலான டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் உபகாரச் சம்பள நிதிவாரியமும் கூட ஒரு மாடியில் செயல்பட்டு வருகின்றது.
அதைவிட முக்கியமாக டத்தோ சரவணன் தலைமையில் இயங்கும் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநில அலுவலகமும் இரண்டாவது மாடியில்தான் இயங்கி வருகின்றது. மஇகா இளைஞர் பகுதி, மகளிர் பகுதி, மஇகா சிலாங்கூர் மாநிலம் ஆகியவையும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனித் தனி அலுவலகங்களில் இயங்கி வருகின்றன.
டத்தோஸ்ரீ சாமிவேலு தலைமையில் இயங்கி வரும் கேபிஜே கூட்டுறவுக் கழகமும் மஇகா தலைமையகத்தில்தான் அலுவலகத்தைக் கொண்டிருக்கின்றன.
இதனால் கொண்டுவரப்பட்ட புதிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன. மஇகா மக்களின் சொத்து, இதில் நுழைய அனுமதி மறுக்க யாருக்கும் உரிமையில்லை என மஇகா உதவித் தலைவர் டத்தோ சரவணன் கடுமையாக சாடியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து டத்தோஸ்ரீ சாமிவேலுவும் எனது உயிர் உள்ளவரை எம்.ஐ.இ.டி அலுவலகத்தை மஇகா தலைமையகத்திலிருந்து யாரும் பிரிக்க முடியாது என ஆக்ரோஷமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குமார் அம்மான் காவல்துறையில் புகார்
இதற்கிடையில் சாமிவேலு தொலைபேசியில் அழைத்து என்னைத் திட்டினார் என குமார் குமார் அம்மான் காவல் துறையில் புகார் ஒன்றைச் செய்திருக்கின்றார். தன்னை “ராஸ்கல்” என்றும் “உன்னைத் தொலைத்துவிடுவேன்” என்றும் சாமிவேலு மிரட்டியதாக குமார் அம்மான் புகாரைச் செய்திருக்கின்றார்.
அதனை மறுத்து டத்தோஸ்ரீ சாமிவேலுவும் காவல் துறையில் குமார் அம்மானுக்கு எதிராக புகார் ஒன்றைச் செய்திருக்கின்றார்.
“மஇகாவின் அறக்காப்பாளர் என்ற முறையிலும் முன்னாள் தேசியத் தலைவர் என்ற முறையிலும் புதிய பாதுகாப்பு விதிமுறை குறித்து நான் அவரிடம் விளக்கம் கேட்டேன். அதற்காக என்னை நோக்கி சத்தம் போட்டும் தகாத வார்த்தைகளால் திட்டியும் குமார் அம்மான் பேசினார்” என சாமிவேலு காவல் துறையில் புகார் கூறியுள்ளார்.
பொதுமக்களை, அவர்கள் யாராக இருந்தாலும் மஇகா தலைமையகத்திற்குள் நுழையாமல் தடுப்பது சட்டவிரோதமாகும் என்றும் சாமிவேலு கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய சாமிவேலுவின் மகனும், மஇகாவின் முன்னாள் சமூக வியூக இயக்குநருமான, டத்தோஸ்ரீ சா.வேள்பாரி, குமார் அம்மான் சட்டவிரோத தலைமைச் செயலாளர் என்றும், அவருக்கு எதிராக சங்கப் பதிவதிகாரியிடம் புகார் செய்ய தான் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக, ம.இ.கா தலைமையகக் கட்டிடத்தில் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்கின்றோம் எனக் கொண்டுவரப்பட்ட ஓர் அறிவிப்பு, ஒரே நாளில் திசைமாறி, காவல் துறை புகார், முன்னாள் தேசியத் தலைவருடன் முட்டல் மோதல் என உருமாறிவிட்டது.
இதற்கிடையில் இன்று, மஇகா தலைமையகம் சென்ற சில மஇகாவினர் மஇகா கட்டிடத்திற்குள் சென்று வர எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
எழுந்த கடும் கண்டனங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறைகள் மீட்டுக் கொள்ளப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.