Home கலை உலகம் ‘அனிருத் லைவ் 2015’ – மலேசிய ரசிகர்களை மகிழ்விக்க மாபெரும் இசை நிகழ்ச்சி!

‘அனிருத் லைவ் 2015’ – மலேசிய ரசிகர்களை மகிழ்விக்க மாபெரும் இசை நிகழ்ச்சி!

698
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 17 – இளம் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்ளும் மாபெரும் இசை நிகழ்ச்சியான ‘அனிருத் லைவ் 2015’ வரும் ஜனவரி 31-ம் தேதி, சன்வே லாகூனிலுள்ள சர்ஃப் பீச்சில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வை கோல்டன் கூஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சவுண்ட் அன்ட் லைட் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

Aniruth Live

#TamilSchoolmychoice

(செய்தியாளர்கள் சந்திப்பில் இசையமைப்பாளர் அனிருத், கோல்டன் கூஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் கே.யேரகச்செல்வன் மற்றும் சவுண்ட் அன்ட் லைட் நிறுவனத்தின் தலைவர் சரளா)

இதற்கான செய்தியாளர்கள் கூட்டம் இன்று மதியம் பண்டார் உத்தாமாவிலுள்ள பிரபல சிக்னேட்சர் உணவுவிடுதியில்  நடைபெற்றது. இதில் அனிருத் கலந்து கொண்டு இந்நிகழ்வு குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

சுமார் மூன்றரை மணி நேரங்கள் நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்வில் அனிருத் தனது சொந்த இசைக்குழுவினர் மற்றும் நடனக்குழுவினருடன் கலந்து கொண்டு மலேசிய ரசிகர்களை தனது இசையால் அசரவைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இளைஞர்களைக் கவரும் விதமாக இசை இருக்குமா? அல்லது எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் இசை நிகழ்ச்சி படைக்கப்படுமா? என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த அனிருத், “ஒரு இசை நிகழ்ச்சி என்றால் எல்லோரையும் கவரும் விதமாக நடத்தப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சியையும் அப்படித் தான் படைக்கப் போகிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்றவர்கள் நடிகர்கள் உங்களுக்கு நெருக்கமான நட்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அவர்களும் வருவார்களா? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அனிருத், “அவர்கள் வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று எதிர் கேள்வி கேட்டார்.

பின்னர், “எனக்கு அவர்கள் நெருங்கிய நண்பர்கள் தான். அவரவர் வேலைகளில் பிசியாக இருப்பார்கள். அதனால் கட்டாயம் வர வேண்டும் என்று அவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று புன்னகையுடன் தெரிவித்தார்.

மலேசியக் கலைஞர்களின் பங்கு:

IMG_6871

இந்த நிகழ்வில் எத்தனை மலேசியக் கலைஞர்கள் பங்குபெறப் போகிறார்கள் என்ற செல்லியலின் கேள்விக்குப் பதிலளித்த அனிருத், இந்த இசை நிகழ்ச்சி குறித்த யோசனை தனக்கு வந்த போது, மலேசியக் கலைஞர்கள் தன்னிடம் முன்னோட்டம் ஒன்றை செய்து காண்பித்தார்கள் என்றும், அவ்வளவு அருமையாக இருந்த அந்த முன்னோட்டம் தனக்கு மிகவும் பிடித்துவிட்டதால் முற்றிலும் மலேசியக் கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று தனக்கு யோசனை வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த இசை நிகழ்ச்சி உருவாகக் காரணமாக இருந்த மலேசியக் கலைஞர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த மூன்று மணி நேர நிகழ்வில் 1 மணி நேரம் மலேசியக் கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற சூப்பர்ஃபிளை மியூசிக், ஸ்டார் சவுண்ட், கேடவுன் கிளான் மற்றும் சைக்கோ யுனிட் ஆகியோர் நிகழ்ச்சி படைக்கவுள்ளனர்.

இவர்களைத் தவிர உலக அளவில் புகழ்பெற்ற பாடகர்களான சக்திஸ்ரீ கோபாலன், இன்னோ கெங்கா ஆகியோரும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பை வழி நடத்தியவர் பாலன் காஷ்மீர் என்ற மலேசிய ராப் இசைக்கலைஞர் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஆங்கிலத்தில் வழி நடத்தினார்.

அனுமதிச் சீட்டின் விலை

‘அனிருத் லைவ் 2015’ என்ற இந்த இசை நிகழ்ச்சியின் அனுமதிச் சீட்டுக்கள் 149 ரிங்கிட் தொடங்கி, 349 ரிங்கிட் வரையில் தரவாரியாக கிடைக்கப்பெறும்.

இந்த அனுமதிச் சீட்டுக்களை http://redtix.airasia.com/Events/Anirudh என்ற இணைய முகவரிக்குச் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது லோடஸ் ஃபைவ் ஸ்டார் சினிமா, ஏர் ஆசிய ரெட்டிக்ஸ் டிக்கெட்டிங் ஹாட்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்