மாஸ்கோ, ஜனவரி 27 – உக்ரைன் விவகாரம் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால் அங்கு கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள நினைத்த ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டின் கிரிமியா பகுதியை தங்கள் நாட்டு இராணுவத்தைக் கொண்டு கைப்பற்றினர்.
அதேபோல், உக்ரைனின் மற்ற பகுதிகளை கைப்பற்ற ரஷ்ய ஆதரவாளர்கள் பலரை தூண்டிவிட்டார். இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தன.
ரஷ்யாவும் தங்கள் நாட்டில் செயல்பட்டு வந்த அமெரிக்க உணவகங்கள் மற்றும் அங்காடிகளை மூடியது. மேலும், உணவு பொருட்களின் இறக்குமதியையும் நிறுத்தியது.
இதனால் ரஷ்யாவில் கடும் உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளன.
இதனை பெய்பிக்கும் விதமாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும் பொதுமக்களை குறைந்த அளவு உணவை உட்கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விடுத்துள்ள அறிக்கையில், “ரஷ்யாவிற்கு தற்போது சோதனைக் காலம் நிலவுகிறது.
எனவே நாம் சில முடிவுகளை எடுத்துத் தான் ஆகவேண்டும். மேற்கத்திய நாடுகளின் உணவு வகைகளை குறைத்து விட்டு பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள்.
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் பருத்தி துணிகளை அணியுங்கள். மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துங்கள். நம் அதிபருக்காகவும், நாட்டின் நலனிற்காகவும் நாம் இதனை செய்தாகவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், மக்கள் அரசியல்வாதிகளின் கூற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், புதின் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.