கோலாலம்பூர், ஜனவரி 27 – மலாயாப் பல்கலைக்கழகத்தில் வரும் ஜனவரி 29 -ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறவுள்ள 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் திறப்பு விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொள்கிறார்.
வரும் ஜனவரி 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில், மலாயாப் பல்கலைக்கழகத்திலுள்ள துங்கு வேந்தர் மண்டபத்தில்(DTC) பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையில் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கான முன்பதிவு குறித்த தகவல்களை அறிந்து கொள்ள www.9icsts2014.um.edu.my என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
கடந்த ஜனவரி 23-ம் தேதி வெள்ளிக்கிழமை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் முதல் கட்ட தொடக்கமாக, மலேசியத் தமிழர்களின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் எடுத்துக் கூறும் கண்காட்சி, மலாயாப் பல்கலைக் கழகத்திலுள்ள ஆசிய தொல்பொருள் கண்காட்சி மையத்தில் தொடக்கி வைக்கப்பட்டது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தலைவரும், தெற்கிழக்காசிய நாடுகளுக்கான கட்டமைப்பிற்கான மலேசியத் தூதருமான டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு இந்த கண்காட்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.