Home நாடு சீன வணிகர்களை புறக்கணிக்கச் சொல்வதா? – யாக்கோப்பிற்கு வேள்பாரி கண்டனம்

சீன வணிகர்களை புறக்கணிக்கச் சொல்வதா? – யாக்கோப்பிற்கு வேள்பாரி கண்டனம்

1126
0
SHARE
Ad

Vell Paariகோலாலம்பூர், பிப்ரவரி 4 – அதிக விலை வைத்து சீன வர்த்தகர்கள் விற்கும் பொருட்களை மலாய்க்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தி இருப்பது தமக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்திருப்பதாக டத்தோஸ்ரீ வேள்பாரி தெரிவித்துள்ளார்.

அனைத்து விவகாரங்களையும் இனக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

“அமைச்சர் என்ற வகையில் டத்தோ இஸ்மாயில் அனைத்து மலேசியர்களையும் பிரதிநிதிக்கிறார். பொருட்களின் சந்தை விலையில் பிரச்சினை இருப்பதாகக் கருதும் பட்சத்தில் அது குறித்து அமைச்சர் என்ற முறையில் அவர் உள்நாட்டு வாணிப அமைச்சருடன் கலந்து பேசலாம். அதிக விலை வைத்து முறைகேடாக பொருட்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்,” என்று வேள்பாரி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அத்தகைய வணிகர்கள் மலாய்க்காரர்களுக்கு மட்டும் பொருட்களை அதிக விலைக்கு விற்பதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து மலேசியர்களுக்கும் விற்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இது அனைத்து மலேசியர்களையும் பாதிக்கும் விவகாரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“முறைகேடு செய்யும் வணிகர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். எனவே அவர்கள் மீது சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இவ்விவகாரத்தை இன மோதலாக மாற்றக்கூடாது. இத்தகைய செயல்பாடு நமது பிரதமரின் ஒரே மலேசியா கோட்பாட்டிற்கு உகந்தது அல்ல.

“மிகக் கடுமையாக உழைக்கும் சீன சமுதாயம் மலேசியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளது. எனவே அச்சமூகத்தை தீய சக்தியாக உருவகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாறாக உலகின் எந்த மூலைக்கு இடம்பெயர்ந்தாலும் ஒற்றுமை உணர்வுடனும் விடாமுயற்சியுடனும் கடுமையாக உழைத்து வெற்றி பெறும் குணாதிசயத்தை அச்சமூகத்திடமிருந்து நாம் கற்க வேண்டும்,” என்று வேள்பாரி மேலும் கூறியுள்ளார்.