Home Slider பேராக்கில் வெடிக்கும் வீடியோ விவகாரம் – கணேசனுக்கு தொகுதி கிடைக்காது?

பேராக்கில் வெடிக்கும் வீடியோ விவகாரம் – கணேசனுக்கு தொகுதி கிடைக்காது?

858
0
SHARE
Ad

டிசம்பர் 23 – மலேசிய அரசியலில் வீடியோ விவகாரங்கள் பல கால கட்டங்களில் பலரது அரசியல் வாழ்வையும், அவர்களின் பிரகாசமான அரசியல் எதிர்காலத்தையும் முடித்து வைத்திருக்கின்றது. அந்த வரிசையில் இப்போது ஆகக் கடைசியாக சிக்கியிருப்பவர் பேரா மாநிலத்தின் சட்டமன்ற பேரவைத் தலைவர் டத்தோ ஆர்.கணேசன் ஆவார்.

அந்த வீடியோ விவகாரத்தை அவர் மறுத்தாலும், ஜ.செ.க தலைவர்கள் தொடர்ந்து அது தொடர்பில் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதனால் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டத்தோ கணேசனுக்கு இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகின்றது.

2008ஆம் ஆண்டு வரை பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த கணேசனுக்கு 2008ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. பேரா மாநிலமும் எதிர்க்கட்சி வசம் போய்விட அரசியல் வாய்ப்பின்றி இருந்த கணேசனுக்கு, அடுத்த ஓரிரு வருடங்களில் அதிர்ஷ்டம் அடித்தது.

#TamilSchoolmychoice

பேராக் மாநிலத்தின் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேசிய முன்னணி பக்கம் சாய, அதனால் மீண்டும் தேசிய முன்னணி பேராவில் ஆட்சியைக் கைப்பிடித்தது.  அதனைத் தொடர்ந்து மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவராக டத்தோ ஆர் கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13வது பொதுத் தேர்தலில் கணேசனுக்கு மீண்டும் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவரும் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியைக் குறி வைத்திருந்தார்.

ஆனால் பூதாகாரமாக வெடித்துள்ள வீடியோ விவகாரத்தைத் தொடர்ந்து மீண்டும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காது  என்று கூறப்படுகின்றது.