பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 22 – கெராக்கான் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும், மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் பணியாற்றிய அமைச்சர்களுள் ஒருவருமான துன் டாக்டர் லிம் கெங் எய்க் இன்று முதுமை காரணமாக காலமானார்.
73 வயதான லிம் பெட்டாலிங் ஜெயா ட்ரோபிகானா பகுதியிலுள்ள அவரது வீட்டில் மாலை 4.45 மணியளவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மூன்று பிள்ளைகளும் அவரது மனைவி தோபுவான் வாங் யூன் சுவான் இருக்கின்றனர்.
அவரது மகன் டத்தோ லிம் சி பின் கெராக்கான் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஆவார்.
அரசியல் பின்னணி
1980ஆம் ஆண்டில் அப்போதைய பினாங்கு முதல்வரும் கெராக்கான் கட்சியின் தலைவருமான டாக்டர் லிம் சோங் யூ பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த கட்சியின் தலைவராக துன் லிம் பதவியேற்றார். பின்னர் புருவாஸ் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட்டு வென்று, மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தார்.
அரசியலில் எதையும் நேரடியாகவும், அதிரடியாகவும் பேசுவதில் துன் லிம் பிரபலமானவராக இருந்தார். அவரது தலைமைத்துவத்தின் கீழ்தான், கோலாலம்பூரில் பிரம்மாண்டமான கெராக்கான் தலைமையகக் கட்டிடம் உருவானது.
2004ஆம் ஆண்டுவரை அமைச்சராக நீடித்த லிம் கெங் எய்க், பின்னர் 2007 ஆண்டில் கெராக்கான் தலைவர் பதவியைத் துறந்தார். அவருக்கு பதிலாக அப்போதைய பினாங்கு முதல்வர் டான்ஸ்ரீ கோ சூ கூன் பதவியேற்றார்.