வாஷிங்டன், பிப்ரவரி 12 – உக்ரைனில் அரசுக்கு எதிராக ரஷ்ய ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். அவர்களை ரஷ்யா மீண்டும் தூண்டி விட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, துப்பாக்கி முனையில் எதையும் தீர்க்க முடியாது என ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண ஜெர்மனி அதிபர் மார்கல் சமாதான தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஒபாமாவை சந்தித்து உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது ஒபாமா கூறியதாவது:- “உக்ரைன் பிரச்சினையில் சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்”.
“ஆனால் ரஷ்யா துப்பாக்கி முனையில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நினைக்கிறது. ஆனால், துப்பாக்கி முனை ஒரு போதும் தீர்விற்கு வழிவகுக்காது. ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை மாற்றி அமைத்து விடலாம் என முயற்சிக்கிறது.”
“இதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இப்போது கூட ரஷ்யாவுடன் மோதல் போக்கை யாரும் விரும்பவில்லை. ஆனால், அதற்கு ரஷ்யா ஒத்துழைக்க வேண்டும்”.
“ரஷ்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதுவரை நினைக்கவில்லை. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி ரஷ்யா அதிபர் புதின் கூறுகையில், “உக்ரைனை காரணமாக வைத்து மற்ற நாடுகள் எங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.