நியூயார்க், பிப்ரவரி 12 – டெல்லி தேர்தல் முடிவுகள், இந்தியப் பிரதமர் மோடியின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது என அமெரிக்காவின் பிரபல இதழ் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியை எட்டியது. மோடியின் அலையில் ஆம் ஆத்மி காணாமல் போய்விடும் என கூறப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும் தவிடு பொடியாகின. இது பற்றி அமெரிக்கா தரப்பிலிருந்து எவ்வித விமர்சனமும் வெளியாகாத நிலையில், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்கள் கெஜ்ரிவாலின் வெற்றியை மோடியின் தோல்வியாகவே கூறி வருகின்றன.
இது குறித்து அந்த இழலில் வெளியான தலையங்கத்தில், “அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பு என்ற மிகப்பெரிய உயரத்தை எட்டிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது உள்ளூர் அரசியல் மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய அளவிலான தேர்தல் உலக நாடுகளால் கவனிக்கப்பட்டாலும், டெல்லியில் நடைபெறும் தேர்தல் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது இதுவே முதல் முறை. இதற்கு முக்கியக் காரணம், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியப் பொதுத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றுது தான்.
மோடியின் தலைமையிலான ஆட்சி, உலக நாடுகளை வெகுவாக கவர்ந்தது. மோடியின் புதிய அணுகுமுறைகளால், இனி சில வருடங்களுக்கு பாஜக வை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று கூறப்பட்டு வந்த நிலையில், கெஜ்ரிவாலின் இந்த வெற்றி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முடிவுகளால், பாஜக சார்பாக முதல் வேட்பாளராக போட்டியிட்டு தோற்ற கிரண் பேடியைக் காட்டிலும், மோடி அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்த தோல்விக்கு, மோடி அரசின் சிறுபான்மை விரோதப் போக்கு மற்றும் இந்துத்துவ கொள்கைகளே அடிப்படை காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மோடி தலைமையிலான ஆட்சியில் மதச்சார்பின்மை குறித்து ஒபாமா உட்பட பல்வேறு தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில், இந்த தோல்வி மீண்டும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.