புதுடில்லி – ஒட்டு மொத்த இந்தியாவும் ஆச்சரியப்படும்படி பலம் பொருந்திய கட்சிகளான பாரதிய ஜனதாவையும், காங்கிரசையும் தோற்கடித்து, வரிசையாக மூன்று முறை டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வராக இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) பதவியேற்றார்.
புதுடில்லியின் பிரபலமான ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பதவியேற்றார்.
அவரது பதவியேற்பு விழாவின் வித்தியாச அம்சமாக பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், தேர்வுகளின் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நகரைத் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் என 50 பேர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து “டில்லியை உருவாக்கியவர்கள்” என்ற பாராட்டு அடைமொழியோடு அவர்களை மேடையேற்றியிருந்தார்கள்.
கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்றது.
70 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளைக் கைப்பற்ற, பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.