Home நாடு 2 மணி நேரத்திற்குப் பிறகு அழைத்த சைருல்?

2 மணி நேரத்திற்குப் பிறகு அழைத்த சைருல்?

493
0
SHARE
Ad

Sirulகோலாலம்பூர், பிப்ரவரி 24 – அல்தான் துயா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருல் அசார் ஓமாருடனான தொலைபேசி உரையாடல் நிகழ்வு முதலில் தோல்வியில் முடிந்தது. எனினும் பின்னர் சைருல் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு பேசினார்.

திங்கட்கிழமை காலை இந்த நிகழ்வு பாஸ் கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ மக்ஃபஸ் ஓமார் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதையடுத்து ஏராளமான செய்தியாளர்கள் திரண்டிருந்தனர்.

ஆனால் காலை 11.30 மணிக்கு தொடங்கி, அடுத்த 45 நிமிடங்களில் சைருலை தொடர்பு கொள்ள 15 முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் மக்ஃபஸ் ஓமார் தர்மசங்கடத்தை எதிர்கொண்டார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொள்வதாக அறிவித்த மக்ஃபஸ் ஓமார், அடுத்த வாரம் சைருலின் குடும்பத்தாருடன் தாம் சிட்னி நகருக்கு செல்லவிருப்பதாகவும் அப்பயணம் குறித்த தகவல்களை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களின் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொலைபேசி உரையாடல் நிகழ்விற்கான நேரம் முடிந்து சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு மக்ஃபஸ் ஓமாரை, தொலைபேசி வழி சைருல் தொடர்புகொண்டு பேசியதாகத் தெரிகிறது. அதுவரை பொறுமையுடன் காத்துக்கிடந்த செய்தியாளர்கள் சிலர் சைருல் பேசுவதைக் கேட்டுள்ளனர்.

சுமார் 3 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த உரையாடலின்போது, சைருல் என நம்பப்படும் எதிர்முனையில் பேசிய நபர், தான் ஆஸ்திரேலிய குடிநுழைவு தடுப்பு மையத்தில் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

“நான் அதிகம் பேச விரும்பவில்லை. எனினும் என்னைப் பாதுகாக்கும் ஆஸ்திரேலிய அரசுக்கும், என்னுடன் தொடர்புடைய செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் மலேசிய ஊடகங்களுக்கும் என் நன்றி.”

“உரிய நேரத்தில் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்தும், எனது தரப்பை விவரித்தும் அறிக்கை வெளியிடுவேன். அதுவரை அவ்வப்போது உரிய தகவல்களை தெரிவித்து வருவேன். நன்றி,” என்று கூறிய கையோடு சைருலின் அந்த தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.