புத்ரா ஜெயா, பிப்ரவரி 25 – மஇகாவில் பிளவு ஏற்படுமானால் தேசிய முன்னணி மீது பழி சுமத்தக் கூடாது என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
மஇகாவில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக அனைத்துப் பதவிகளுக்கும் மறுதேர்தலை நடத்த தேசிய முன்னணி தலைமைத்துவம் முயற்சி மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய முயற்சி புறக்கணிக்கப்படுமானால், மஇகாவில் பிளவு ஏற்படும் என்றார்.
“மஇகாவில் நிலவி வரும் சிக்கலைத் தீர்க்க தேசிய முன்னணித் தலைவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டனர். இனி தங்களது தலைவிதியை அக்கட்சி உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும்.உட்கட்சிப் பிரச்சினைக்கு மறுதேர்தல் தீர்வாக அமையாது என்றும், வேறு வழிகள் இருப்பதாகவும் மஇகா கருதினால், அவர்கள் விரும்பியதை செய்து கொள்ளட்டும். மஇகா தலைவர்கள் நன்கு படித்தவர்கள், அனுபவமிக்கவர்கள். எனவே உட்கட்சி நெருக்கடி காரணமாக கட்சி பிளவுபட்டால் எங்கள் மீது பழிபோட வேண்டாம்” என்றார் மொகிதின் யாசின்.
மறுதேர்தலை நடத்துமாறு மஇகா தலைவர்களிடம் அறிவுறுத்துவதைத் தவிர தேசிய முன்னணி தலைமையால் வேறு ஏதும் செய்ய முடியாது என தேசிய முன்னணி துணைத் தலைவருமான அவர் மேலும் குறிப்பிட்டார்.