கோலாலம்பூர், பிப்ரவரி 25 – ஓரினப் புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு வழங்கக் கோரி அவரது குடும்பத்தார் மனு அளித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அரச மன்னிப்பு கோருவதற்கான மனுவை இஸ்தானா நெகாராவில் பிகேஆர் தலைவியும், அன்வாரின் மனைவியுமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா, அவரது இரண்டாவது மகள் நூருல் நுகா உள்ளிட்டோர் அளித்துள்ளனர்.
“எங்கள் தந்தையின் சார்பில் நாங்கள் அரச மன்னிப்பு கோருகிறோம். இதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன,” என்றார் அன்வாரின் மூத்த மகள் நூருல் ஈசா.
ஐசெகவின் தலைவர் லிம் கிட் சியாங், அவரது புதல்வர் லிம் குவான் எங் இருவரும் சிறையில் இருந்த வேளையில் இதேபோல் அரச மன்னிப்பு கோரியதை அவர் சுட்டிக்காட்டினார்.
“அரச மன்னிப்பு கோரும் மனு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் என் தந்தையை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கியிருக்கலாம். ஆனால் குடும்பம் என்ற வகையில் எங்கள் தந்தை அப்பாவி என உறுதியாகச் சொல்கிறோம். கூட்டரசு அரசியல் சாசனத்தின் 42ஆவது பிரிவின்படி, நீதியின் பெயரால் அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்து அரச அமைப்பு மன்னிப்பு வழங்கும் என நம்புகிறோம்,” என்று நூருல் இசா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் அன்வாரை விடுவிக்க சட்ட ரீதியாகவும் அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அன்வாருக்கு அரச மன்னிப்பு கிடைக்கும் பட்சத்தில் அவரது பெர்மாத்தாங் பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகாது என்பது குறிப்பிடத்தக்கது.