காஜாங், மார்ச் 3- உலு லங்காட் மஇகா இளைஞர் பிரிவு தலைவர் ஒருவரின் உறவினர் காஜாங்கில் சுடப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். குண்டர் கும்பல்களுக்கு இடையேயான மோதல் காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாகத் தெரிகிறது.
திங்கட்கிழமை மதியம் 12.50 மணியளவில் ஜாலான் ரெகோவில் உள்ள போக்குவரத்து விளக்கு அருகே இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க சுடப்பட்ட அந்த ஆடவர் வந்த காரின் அருகே திடீரென மோட்டார் ஒன்று வந்தது. அதில் அமர்ந்திருந்த இரு ஆடவர்கள், காரை நோக்கி ஆறு முறை சுட்டுள்ளனர்.
இதையடுத்து துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள், காருக்குள் படுகாயமடைந்து கிடந்த ஆடவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததை உறுதி செய்த சிலாங்கூர் மூத்த துணை ஆணையர் டத்தோ அப்துல் சமா மட், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
எனினும் எந்த குண்டர் கும்பல்களுக்கு இம்மோதலில் தொடர்புள்ளது என்பது குறித்து மேலதிக தகவல்களை வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது.