கோலாலம்பூர், மார்ச் 3 – திரெங்கானுவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆடை அணிவது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என அம்மாநில மந்திரிபெசார் டத்தோ அகமட் ரசிப் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஒருவரது அறிவிப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
“இத்தகைய ஒரு செய்தி மிக வேகமாகப் பரவியது கண்டு வியந்தேன். இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட ஆட்சிமன்றக் குழு உறுப்பினரிடம் பேசினேன். அவரது அறிவிப்பு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. சுற்றுலா பயணிகள் மீது புதிய கட்டுப்பாடுகளை திணிக்க நாங்கள் விரும்பவில்லை. தற்போதுள்ள சட்டங்களை வைத்தே நாகரிகமற்ற வகையில் உடைகள் அணிவதை எதிர்கொள்ள முடியும்,” என்றார் அகமட் ரசிப் ரஹ்மான்.
முன்னதாக ஆட்சிமன்ற குழு உறுப்பினரான டத்தோ முகமட் ஜிடின் சஃப்பி, சுற்றுலா பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படும் என கூறியதாக தகவல் வெளியானது.