Home அவசியம் படிக்க வேண்டியவை பழனி நீதிமன்ற நடவடிக்கையால் அமைச்சர் பதவியை இழப்பாரா? சோதி, பாலா ஆகியோரின் அரசாங்கப் பதவிகள் கேள்விக்குறியா?

பழனி நீதிமன்ற நடவடிக்கையால் அமைச்சர் பதவியை இழப்பாரா? சோதி, பாலா ஆகியோரின் அரசாங்கப் பதவிகள் கேள்விக்குறியா?

919
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 3 – (நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து, மஇகா நிலவரங்கள் குறித்து, மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்)

Tamil Maniம இ காவில், இப்போது வழக்கு படலம் தொடங்கியுள்ளது. நடப்பு அமைச்சரான டத்தோஸ்ரீ பழனிவேல் உள்துறை அமைச்சின் கீழ் வரும் சங்கப் பதிவகத்தின் மீது இவ்வழக்கை தொடுத்து உள்ளார். ம இ கா விவகாரமாக அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால். பழனியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கப்போகிறது என்பது குறித்த பார்வை அவர்மீது தற்போது திரும்பியுள்ளது.

அதேவேளை இவரைத் தொடர்ந்து டத்தோ சோதிநாதன், டத்தோ பாலகிருஷ்ணன், பிரகாஷ் ராவ் உள்ளிட்டோரும் தனித் தனியே.வழக்கை உள்துறை அமைச்சின் கீழ் இயங்கும் சங்கங்களின் பதிவு இலாகாவுக்கு  எதிராகத் தொடுத்துள்ளார்கள். இவ்வழக்கு வரும் மார்ச் 9ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நால்வரைப்போலவே இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏ.கே.இராமலிங்கம் என்பவரும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

“மறுதேர்தல் ஏன்?”

g-palanivel_mic-300x1982013ல் மலாக்காவில் பழனி தேர்தல் குழுத் தலைவராகப் பொறுப்பேற்று நடத்திய தேர்தலில் மூன்று உதவித்தலைவர்கள் பதவிக்கும் 23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்குமான தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று போட்டியிட்டவர்கள் சிலர் கொடுத்த புகாரை யொட்டி, உள்துறை அமைச்சு கீழ் இயங்கிவரும் சங்கங்களின் பதிவு இலாகா ஓராண்டுக்கு முன்பு விசாரணையை மேற்கொண்டதையொட்டி, மறு தேர்தலுக்கு அது உத்தரவிட்டது.

அந்த உத்தரவை ம இ கா தலைவர் என்ற வகையில் தமது காதில் போட்டுக்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கையில் பழனி இறங்காமலிருந்து வந்ததால், கட்சியின் பதிவு ரத்தாகும் நிலைக்கு வந்தபோதுதான், பிரதமர் தலையிட்டு சமரசம் செய்தார்.

பிரதமரின் முதல் கட்ட சமரசத்திற்கு ஒத்துக்கொண்ட பழனி அதன்பின்னரும் கட்சியின் மறுதேர்தலுக்கான எந்த நடவடிகையிலும் இறங்கவில்லை. அதன் பின்னர் பதிவு இலாகாவின் கெடுபிடிகள் அதிகமாகவே பிரதமர். மீண்டும் தலையிட்டு சமரசம் செய்தபோது மறு தேர்தலுக்கு ஒத்துக்கொண்டபடி நடந்து கொள்ளத் தவறினார்.

அதன்பின்னர் மூன்றாவது முறையும் பிரதமர் அழைத்துப் பேசிய போதுதான் 2009 ஆம்ஆண்டிற்கான நிர்வாகமே பொறுப்பேற்று தேர்தலை நடத்தி. முடிக்கட்டும்,அதற்கு அம்னோ துணை நிற்கும் என்றார் பிரதமர். இதற்கும் பிரதமரிடம் ஒத்துக்கொண்டு வந்த பழனி, மீண்டும் அந்தர் பல்டி அடித்து, ஏ.கே.இராமலிங்கத்தை முன்னிறுத்தி சங்கப் பதிவகத்திற்கு எதிராக வழக்கை பதிவு செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே மேலும் நான்கு வழக்குகளை பதிவு இலாகாவுக்கு எதிராக பழனிவேல் தொடுத்துள்ளார். இதில் தமது பெயரிலேயே ஒரு வழக்கை பழனிவேல் தொடர்ந்திருக்கின்றார் என்பதுதான் மிகவும் விசித்திரமாகவுள்ளது.

“அரசு ஊழியர் அரசு மீது வழக்கா?”

Dato S.Sothinathanஓர் அரசாங்க ஊழியரான பழனி தமது கட்சி பிரச்சனையை முன்வைத்து உள்துறை அமைச்சுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் அமைச்சராகப் பொறுப்பேற்கும் போது. செய்து கொண்ட சத்திய வாக்குமூலப் பிரமாணத்திற்குப் புறம்பாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது. இதன் மூலம் அவர் வகித்து வரும் அமைச்சர் பதவி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இவரைப்போலவே அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் என்ற பட்டியலில் அடங்கியுள்ள டத்தோ சோதிநாதன், டத்தோ பாலகிருஷ்ணன், பிரகாஷ் ராவ், ஏ.கே.இராமலிங்கம் போன்றவர்கள் இனி பாரிசான் அரசாங்கத்தில் செனட்டர்களாகவோ, சட்டமன்ற உறுப்பினர்களாகவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, துணையமைச்சர்களாகவோ, முழுஅமைச்சர்களாகவோ இன்னும் சொல்லப்போனால் ஒரு மாவட்ட மன்ற உறுப்பினர்களாகவோ பதவியேற்க வாய்ப்பு கிடைத்தாலும், அரசுக்கு எதிரான இந்த வழக்கால், அவர்கள் அத்தனைப் பேரும் இத்தகைய அரசாங்கப் பதவிகளை எதிர்காலத்தில் அடைய முடியுமா என்பது தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

இதனால் இவர்களின் அரசியல் எதிர்காலம் தெரிந்தோ தெரியாமலோ பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவே தெரிகிறது.

தீர்க்க முடியாத தீர்ப்பா?

Dato S.Balakrishnanபழனியைப்பொறுத்தவரை தமது அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள விரும்புகிறார் என்பது ஓரளவு அம்பலத்திற்கு வந்துள்ள விசயமாகவே படுகிறது. அதனால் அவருக்கு கட்சியின் பதிவு ரத்தாவது பற்றியோ இனி தொடர்நது அமைச்சராக இருக்க வேண்டும் என்ற எண்ணமோ அறவே கிடையாது.

அதற்கு நேர்மாறாக கட்சிக்கு டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் எந்த வகையிலும் தலைவராக. வந்துவிடக் கூடாது என்பதுதான் அவரின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள எந்தளவுக்கும் பழனி.இறங்கிப்போகத் தயாராகவே இருக்கிறார் என்பதற்கான எடுத்துக்காட்டுகள்தான் அண்மையக் கால தொடர் சம்பவங்களும் அதையொட்டிய எதிர் வினைகளுமாகும்.

அதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் நாட்டின் உச்ச அதிகாரம் பெற்றவரும் தேசிய முன்னணியின் தலைவருமான பிரதமரே மூன்று முறைக்கு மேல் தலையிட்டுப் பேசியும் தீர்வு காண முடியாத சிக்கலாக ம இ கா பிரச்சனை இன்றைக்கு பழனிவேலுவால் விஸ்வரூபம் எடுத்து நிற்பது!

-பெரு.அ.தமிழ்மணி

(பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.)

தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்)  அகப்பக்கத்தில் காணலாம். கட்டுரையாளரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: 

wrrcentre@gmail.com