Home நாடு சிறைக்குள் அன்வாரைச் சந்தித்தார் அஸ்மின் அலி!

சிறைக்குள் அன்வாரைச் சந்தித்தார் அஸ்மின் அலி!

579
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 2 – சிறைக்குள் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்  அன்வார் இப்ராகிமைச் சந்தித்துப் பேசியுள்ளார் சிலாங்கூர் மாநில மந்திரிபெசார் அஸ்மின் அலி.  இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

Anwar Azmin Comboகடந்த வியாழக்கிழமை சுங்கை பூலோ சிறைக்கு வருகை மேற்கொண்ட சிலாங்கூர் மந்திரிபெசார் அஸ்மின் அலி முதலில் மரியாதை நிமித்தம் சிறைச்சாலை இயக்குநரைச் சந்தித்துவிட்டு அவரது அனுமதியுடன் அன்வாரைச் சந்தித்துள்ளார்.

இது ஒரு முன்னேற்பாடு இல்லாத சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மந்திரி பெசார் என்பதால், அஸ்மின் அலி முன் அனுமதி இல்லாமல் இந்த சந்திப்பை நடத்த அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அது மட்டுமல்லாமல், அன்வார் இப்ராகிம் இன்னும் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார ஆலோசகராக செயல்பட்டு வருவதால், அவரது ஆலோசனைகளைப் பெறும் பொருட்டு அஸ்மின் அலி அவரை அடிக்கடி சந்திக்க முடியும்,

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராகவும் இருக்கும் அஸ்மின் அலி இந்த சந்திப்பின் மூலம் கட்சியில் தனக்கிருக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியிருப்பதோடு, அன்வாருடன் தான் இன்னும் கொண்டிருக்கும் நெருங்கிய அரசியல் உறவையும் புலப்படுத்தியிருக்கின்றார்.

நேற்றைய ஸ்டார் ஆங்கில நாளிதழில் அரசியல் கண்ணோட்டக் கட்டுரைகள் படைக்கும் ஜோஸ்லின் தான் எழுதியுள்ள கட்டுரையில் அன்வாருக்கும், அஸ்மினுக்கும் இடையில் நிகழ்ந்த இந்த சந்திப்பு குறித்து விவரித்துள்ளார்.

அநேகமாக, பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் குறித்தும், அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் அவர்களின் பேச்சு வார்த்தைகள் இருந்திருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அன்வார் -அஸ்மின் வாழ்க்கைச் சூழல் மாற்றங்கள்

Anwar_Ibrahim - Azmin Ali

அன்வார் – அஸ்மின் அலி (பழைய கோப்புப் படம்)

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் விதி எப்படியெல்லாம் விளையாடுகின்றது என்பதற்கு அன்வார்-அஸ்மின் அலி வாழ்க்கையே சிறந்த உதாரணம்.

அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் அதிகாரத் தோரணையுடன் அன்வார் இப்ராகிம் வலம் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு செயலாளராக அவருடன் அரசியல் வாழ்வில் இணைந்தவர் அஸ்மின்.

கால ஓட்டத்தில் தான் தலைவனாக வரித்துக்கொண்ட அன்வார் இப்ராகிம் மகுடம் இழந்து, பதவிகள் இழந்து, சிறைச்சாலைக்குள் அடைபட்டபோது, அவருக்காக முன்னின்று தளபதியாக போராட்டம் நடத்தியவர் அஸ்மின்.

சிறையிலிருந்து மீண்ட, அன்வார் எதிர்க்கட்சிகளுக்கு தலைமையேற்று தேசிய முன்னணிக்கு எதிராகப் போராட்டம் நடத்த அதன் மூலம், 2008இல் கைப்பற்றப்பட்ட சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசாராக கடந்த ஆண்டு மகுடம் சூட்டப்பட்டார் அஸ்மின்.

இன்று, மீண்டும் அஸ்மின் அலியின் தலைவர் அன்வார் சிறைச்சாலைக்குள் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் செயலாளராக இருந்த அஸ்மின் அலியோ, அன்வாரின் ஆசீர்வாதத்தால் இன்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராக, சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரிபெசாராக பதவிகளை அடைந்து உயர்ந்து நிற்கின்றார்.

அன்வாரை நினைத்த நேரத்தில் சிறைக்குள் சென்று காணக் கூடிய அதிகாரத்தில் அஸ்மின் இன்று இருக்கின்றார்.

அந்த அதிகாரமும் அன்வார் இப்ராகிமின் தலைமைத்துவத்தால் அஸ்மின் அலிக்கு கிடைக்கப்பட்டதுதான் என்பதும் மற்றொரு வினோதம்.

இதைத்தான் விதியின் விளையாட்டு என்பதா?

-இரா.முத்தரசன்