கோலாலம்பூர், மார்ச் 3 – மத்திய செயலவையின் அனுமதியின்றி சங்கங்களின் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ள டத்தோஸ்ரீ பழனிவேல் கட்சியின் சட்டவிதிகளுக்கு இணங்க அதன் உறுப்பினர் தகுதியை இழந்துள்ளார் என ம.இ.கா.வின் முன்னாள் வியூக இயக்குநரான டத்தோஸ்ரீ வேள்பாரி வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் 3 உதவித்தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயலவையினரின் மறு தேர்தலுக்கு உத்தரவிட்டுள்ள சங்கங்களின் பதிவகத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு ஒன்றினை பழனிவேலும் 3 மேல்மட்டத் தலைவர்களும் பிப்ரவரி 23-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவ்வழக்கு மார்ச் 9-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் வேள்பாரி குறிப்பிட்டார்.
கட்சியின் சட்டவிதி ஷரத்து 91இன்படி, ஒவ்வொரு உறுப்பினரும் தமது அல்லது வேறு உறுப்பினரின் உரிமை, கடமை, செயல்பாடு மற்றும் சலுகைகள் பற்றி மத்திய செயலவை எடுக்கும் முடிவுக்கு கட்டுபட வேண்டுமென்றும், உரிமை, கடமை, செயல்பாடு மற்றும் சலுகைகளின் சார்ந்து மத்திய செயலவை எடுக்கும் எந்த முடிவினைப் பற்றியும் அல்லது கட்சியின் சட்டதிட்டங்களை எதிர்த்து மத்திய செயலவையில் ஒப்புதலின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், சம்பந்தப்பட்ட உறுப்பினர் இயல்பாகவே கட்சியின் உறுப்பியத்தை இழப்பதோடு உறுப்பினருக்கான உரிமையை நிலைநாட்டவும் உரிமை இல்லை தெளிவாகக் குறிப்பிடுவதாக வேள்பாரி சுட்டிக் காட்டியுள்ளார்.
கட்சியின் தலையாய அதிகாரத்தைப் பெற்று மத்திய செயலவை என்றும் நீதிமன்ற வழக்கு தொடுப்பதற்கு மத்திய செயலவையின் அனுபதி தேவை என்பதை பழனிவேலின் வழக்கறிஞர்களுக்குத் தெரியாதா? என்றும் வேள்பரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவிருப்பதால், அதற்குள் பழனிவேலின் தகுதியை உறுதிபடுத்த வேண்டுமென்றும், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் எவ்வாறு அமைச்சர் பதிவியை வகிக்க முடியும் என்றும் வேள்பரி கேள்வி எழுப்பினார்.
பின்விளைவுகளைச் சிந்திக்காமல் தாம் எடுத்த முடிவினால், பழனிவேல் தமது ம.இ.கா. உறுப்பினர் பதவியையும் அமைச்சர் பதவியையும் இழக்க நேரிடும் என வேள்பாரி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.