புதுடெல்லி, ஏப்ரல் 7 – ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுக அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான இறுதிகட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இதில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரானவர் பவானிசிங்.
அந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தார், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கிலும், பவானிசிங்கே அரசு வழக்கறிஞராக ஆஜரானார். ஆனால், கர்நாடக அரசு பவானிசிங்கை ஆஜராகுமாறு ஆணை பிறப்பிக்கவில்லை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைதான் அந்த ஆணையை கொடுத்தது.
பவானிசிங், குற்றவாளி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்று திமுகவின் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்பு வாதம் கடந்த வாரம் புதன்கிழமை நிறைவடைந்துள்ளது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், பவானிசிங் ஆஜரானதில் சட்ட விதிமுறை மீறல் இல்லை என்று வாதிட்டார்.
இன்று இறுதிவாதம் நடக்கிறது. அநேகமாக இன்றே தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்பை தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்றமும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதியை அறிவிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.