Home நாடு நினைவஞ்சலி: ஜெயகாந்தன் – கட்டை விரலைக் கேட்காத துரோணர்!

நினைவஞ்சலி: ஜெயகாந்தன் – கட்டை விரலைக் கேட்காத துரோணர்!

1301
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 11 – (மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்து, செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வரைந்துள்ள நினைவஞ்சலிக் கட்டுரை)

Jayakanthan writerகடந்த ஏப்ரல் 8ஆம் நாள் தமிழ் இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு மறைந்த, ஜெயகாந்தன் அளவுக்கு நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில், சக எழுத்தாளர்களைப் பாதித்த இன்னொரு எழுத்தாளரைக் காணமுடியாது.

வாசகர்களைப் பாதித்த எழுத்தாளர்கள் ஏராளம். ஆனால் எழுத்தாளர்களை அதிகமாகப் பாதித்த எழுத்தாளர்களில் முதலாமவர் ஜெயகாந்தன்.

#TamilSchoolmychoice

எனது இருபதாம் வயதுகளில் சிறுகதை என்ற இலக்கிய ஊடகத்திற்குள் நுழைந்த போது, படிக்கத் தூண்டியதும், அவரைப் போல் எழுத வேண்டும் என எனக்குள் புதைந்திருந்த எழுத்தார்வத்தை கிளறி விட்டதும் ஜெயகாந்தனின் சிறுகதைகள்தான்.

அவரது சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றைப் படித்து முடித்தவுடன், நமது மனத்தில் வெடித்துக் கிளம்பும் கேள்விகள், விவாதங்கள், சிந்தனைப் புயல்கள், சர்ச்சைகள் எண்ணிலடங்காதவையாக நீண்டு கொண்டே போகும்.

வாசகன் என்ற நிலையைத் தாண்டி ஓர் எழுத்தாளராக சிந்தித்தால், கண்டிப்பாக நமக்குள் அவரது சாயலில், மற்றொரு கோணத்தில், நமது மலேசிய உள்நாட்டு சம்பவங்களோடு நமது மனம் முடிச்சு போட்டு வைத்திருக்கும் ஒரு புதிய சிறுகதை வடிவம் நமக்குள் முகிழ்க்கும்.

இதை நானே அனுபவித்து, அந்த அடிப்படையில் பல சிறுகதைகளைப் படைத்திருக்கின்றேன்.

பின்னாளில், ஜெயகாந்தன் குறித்து மற்ற தமிழக எழுத்தாளர்களின் பேட்டிகள், எழுத்துக்களைப் படித்த போது, அநேகருக்கு இதே போன்றதொரு அனுபவம் ஏற்பட்டிருக்கின்றது என்பதையும், பலர் அவரது கதைகளின் பாதிப்புதான்  எங்களை எழுதவே தூண்டியது என்றும் கூறியிருக்கின்றார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறு சக எழுத்தாளர்களை மரியாதையோடு பாதித்ததிலும், அவர்களையும் எழுத்துத் துறையில் கால்பதிக்க வைத்ததிலும், ஏற்கனவே ஆழ்ந்திருந்தவர்களைத் தொடர்ந்து எழுத வைத்ததிலும், ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

எழுத்தாளர்களுக்கு கௌரவம் ஏற்படுத்தித் தந்தவர்

Jayakanthan young lookஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமை, கம்பீரம் அவரது காலத்தில் இன்னொரு எழுத்தாளருக்கு வாய்த்ததில்லை.

அவர் எழுதிய காலங்களிலும், எழுதாத காலங்களிலும் இலக்கியக் காட்டில் அவர்தான் தலைமைச் சிங்கமாக இறுதிவரை உலா வந்தார்.

எவ்வளவு பெரிய பிரமுகராக இருந்தாலும் – கலைஞர் கருணாநிதியாக இருந்தாலும் – கமல்ஹாசனாக இருந்தாலும் – இளையராஜாவாக இருந்தாலும் – ஜெயகாந்தனை மேல் நிலையில் வைத்து ஆதர்சிக்கும் நிலைமைதான் இருந்ததே தவிர, ஜெயகாந்தன் கீழ் இறங்கிச் சென்றோ, தேடிச் சென்றோ, யாரோடும், சமரசம் செய்து கொண்டதாக, தகவல்கள் இல்லை.

எழுத்தாளனுக்கே உரிய ஆளுமை, முக்கியத்துவம், கம்பீரம் – இப்படியாக பக்கம் பக்கமாக பலர் எழுதியிருந்தாலும், அதை உண்மையாக வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன்தான்.

ஒரு சக எழுத்தாளனுக்கு – அவனே ஜெயகாந்தன்தான் நமது முன்னோடி என நினைத்துக் கொள்ளும் அளவுக்கு – எழுத்தாளர்களுக்கு கௌரவத்தையும், பெருமையையும் தேடித் தந்தவர் ஜெயகாந்தன்.

ilayaraja-jayakanthanஇன்றைக்கு ஒரு சர்ச்சைக்குரிய விவகாரத்தை தனது எழுத்தில் பதிவு செய்த காரணத்தால், ஒரு ‘பெருமாள் முருகனுக்கு’ ‘மாதொரு பாகனால்’ நேர்ந்த நெருக்குதலையும், தாக்குதலையும், நாம் காணும்போது, எத்தனையோ சர்ச்சைகளை துணிச்சலும் எதிர்கொண்டு, யாரோடும் சமரசம் செய்து கொள்ளாமல் எதிர்த்துப் போராடிய ஜெயகாந்தனின் எழுத்து வீரத்தை நம்மால் ஒப்பிடாமல் இருக்க முடியாது.

தான் காட்டிய எழுத்து ஆளுமைக்கு ஈடாக முறுக்கி வைத்த முரட்டு மீசை, நீண்ட கிருதா, நீண்ட சுருள் முடி என உருவத்திலும் கம்பீரத்தோடு வாழ்ந்தவர் ஜெயகாந்தன்.

கட்டை விரலைக் கேட்காத துரோணர்

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயகாந்தன் மலேசியாவுக்கு வருகை தந்தபோது, மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனின் ஒத்துழைப்போடு, சை.பீர் முகம்மது போன்ற சக எழுத்தாளர்களோடு, ஜெயகாந்தன் தங்கியிருந்த விடுதி அறையில் நீண்ட நேரம் அவரோடு பல கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

செல்பேசியில் படம் எடுக்கும் தொழில்நுட்பமும், தம்படம் (செல்பி) மோகமும் இல்லாத காலகட்டம் அது என்பதால், அத்தகைய அரிய சம்பவத்தின் காட்சிகளை படம் எடுத்து வைத்துக் கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இப்போது ஏற்படுகின்றது.

ஜெயகாந்தனோடு அன்று நிகழ்ந்த உரையாடலின் போது நான் கூறினேன் :

“சார்! நான் எழுதுகின்ற காலத்தில் உங்களின் எழுத்துக்களைப் பார்த்துத்தான் எழுதவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் கொழுந்துவிட்டது. தொடர்ந்து எழுதியதற்கான காரணங்களில் ஒன்று உங்களின் பாதிப்பு. அதனால், உங்களின் ஏகலைவன் நான் என்று பெருமையோடு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்”

உடனே சற்றும் சளைக்காமல் ஜெயகாந்தன் சிரித்துக் கொண்டே பதில் கொடுத்தார் “கவலைப்படாதீர்கள் உங்களின் கட்டை விரலை நான் கேட்க மாட்டேன்”.

உண்மைதான்! அப்படி அவர் கேட்கத் தொடங்கியிருந்தால், இன்றைக்கு பல எழுத்தாளர்கள் கட்டை விரலின்றி திரிந்து கொண்டிருப்பார்கள்.

இரா.முத்தரசன்