கோலாலம்பூர், ஏப்ரல் 15 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பேராக் மாநிலம் கிரிக்கில் உள்ள ராணுவ முகாமில் உள்ள வீரர்களுக்கு ஆடவர் ஒருவரால் விடுக்கப்பட்ட மிரட்டலையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு ஆயுதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
நாடு முழுவதிலும் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக மலேசிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
அங்கிருந்து ஆயுதங்களை கடத்திச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி (படம்) அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி கிரிக் ராணுவ முகாமின் நுழைவுப் பகுதி அருகே வந்த 30 வயது மதிக்கத்தக்க ஓர் ஆடவர் அம்முகாமில் உள்ள பிரார்த்தனைக் கூடத்தை பயன்படுத்த தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பலமுறை கேட்டும் அனுமதிக்கப்படாததால் அந்நபர் முகாமின் நுழைவுப் பகுதியிலேயே தனது தொழுகையை முடித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த அவர், முகாம் காவலர்களை எச்சரித்ததாக தெரிகிறது.
“நீங்கள் அனைவரும் உங்களது ஆன்மாவை சுத்தம் செய்யுங்கள். முகாமிற்குள்ளேயே இருந்துவிடுங்கள். வெளியே வராதீர்கள்,” என்று அவர் கூறியதாக ‘தி ஸ்டார் ஒன்லைன்’ ஆங்கில இணைய செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்தே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் திட்டம் குறித்து சாஹிட் ஹமிடி தகவல் வெளியிட்டார்.
இந்நிலையில் அனைத்து மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கு புக்கிட் அம்மான் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
காவல் நிலையங்களுக்கு வரும் அனைவரையும் தீர விசாரிக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அந்த உத்தரவுகளின் வழி காவல் துறைஅறிவுறுத்தப்பட்டுள்ளது.