மே 13 – (தொழிலாளர் கட்சியின் தோல்விக்குக் காரணமான ஸ்காட்லாந்து வாக்காளர்கள் ஏன் அந்தக் கட்சிக்கு எதிராக வாக்களித்தனர் ? – அதன் பின்னணி என்ன? –செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத் தேர்தல் குறித்த அலசல் இரண்டாவது பாகமாகத் தொடர்கிறது)
இயற்கை எழிலின் உச்ச கட்டத்தை நீங்கள் முழுமையாகக் கண்டு அனுபவிக்க வேண்டுமானால், அதற்குரிய முதன்மையான நாடுகளில் ஒன்று ஸ்காட்லாந்து.
ஸ்காட்லாந்து நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளில் ஒன்று…
பச்சைப் புல்வெளி படந்த குன்றுகள். அவற்றுக்கிடையில் விசாலமாக பரந்து கிடக்கும் விவசாய மைதானங்கள். ஆங்காங்கே மேய்ச்சலில் ஈடுபட்டிருக்கும் – வெண்புள்ளிகளாகத் தெரியும் ஆடுகள், மாடுகள் என கால்நடைகள். முகம் பார்க்கும் தெளிந்த நீரோடைகளைக் கொண்டிருக்கும் நதிகள் என விவரித்துக் கொண்டே போகலாம் ஸ்காட்லாந்தின் அழகை!
பிரிட்டன் தேர்தல்களில் ஸ்காட்லாந்து மக்கள் எப்போதும் பாரம்பரியமாக தொழிலாளர் கட்சிக்குத்தான் வாக்களித்து வந்திருக்கின்றனர்.
ஆனால் இந்த முறை மொத்தமுள்ள 59 தொகுதிகளில் 56 தொகுதிகளை ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (Scotland National Party) வென்று சாதனை படைத்திருக்கின்றது.
ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவி நிக்கோலா ஸ்டர்ஜன்
கடந்த தேர்தலில் இதே ஸ்காட்லாந்தில் வெறும் 6 தொகுதிகளை மட்டும் கொண்டிருந்த ஸ்காட்லாந்து தேசிய கட்சி (Scotland National Party) இந்த முறை 50 தொகுதிகளைக்கூடுதலாக வென்றிருக்கின்றது.
அதிலும் தொழிலாளர் கட்சியின் வசமிருந்த 40 தொகுதிகளை போராடிக் கைப்பற்றியிருக்கின்றது. இதற்கு முக்கியக் காரணகர்த்தாவாகக் கருதப்படுபவர் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவியான நிக்கோலா ஸ்டர்ஜன். இவர்தான் ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிட்டனிடமிருந்து பிரிய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருபவர்.
ஏன் நிகழ்ந்தது இந்த மாற்றம் என்பதைத் தெரிந்து கொள்ள நாம் கொஞ்சம் பின்னோக்கிப் போகவேண்டும்.
ஸ்காட்லாந்தின் தனிநாடு கோரிக்கை
பிரிட்டன் என்பதற்கும் யுனைடெட் கிங்டம் (United Kingdom) என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று பலர் பல வேளைகளில் குழம்பியிருக்கக் கூடும். காரணம், இந்த இரண்டு பெயர்களிலும் இந்த நாடு அழைக்கப்படுகின்றது.
யுனைடெட் கிங்டம் என அழைக்கப்படும் நாடுகளின் வரைபடம்…
அதே சமயம் ஒரே நாடாக இருக்கும் பிரிட்டன், உலகக் காற்பந்து போட்டிகள் என்று வரும்போது மட்டும் ஸ்காட்லாந்து என்றும் இங்கிலாந்து என்றும் தனித் தனியாக போட்டிகளில் ஏன் குதிக்கின்றன என்ற குழப்பமும் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.
சரித்திரபூர்வமாக, ஸ்காட்லாந்து தனிநாடு, இங்கிலாந்து தனிநாடு. இங்கிலாந்தை ஒட்டியுள்ள வேல்ஸ் என்பதும் தனிநாடு.
இங்கிலாந்து அரச பரம்பரை கால ஓட்டத்தில் ஸ்காட்லாந்தையும், வேல்ஸ் நாட்டையும் வெற்றி கொண்டு தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து வேல்ஸ் ஒரு மாநிலமாக இங்கிலாந்தோடு இணைந்து கொள்ள, ஸ்காட்லாந்தும் இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டு பிரிட்டன் அல்லது கிரேட் பிரிட்டன் என்ற நாடாக உருவாகியது.
பின்னர் கத்தோலிக்க மக்களை அதிகமாகக் கொண்ட நாடான வட அயர்லாந்தும் பிரிட்டனுடன் இணைக்கப்பட அதன் பின்னர் யுனைடெட் கிங்டம் என்ற பெயரில் பிரிட்டன் அழைக்கப்பட்டது. ஆக, யுனைடெட் கிங்டம் என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து என நான்கு பிரதேசங்களை உள்ளடக்கியதாகும்.
ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவி நிக்கோலாவுடன் (நடுவில் ஆரஞ்சு வண்ண உடையில்) அவரது ஆதரவாளர்கள் 56 தொகுதிகளை வென்ற வெற்றிக் கொண்டாட்டத்தில்…
இன்று வரை வட அயர்லாந்து மட்டும் தனிநாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றது.
ஸ்காட்லாந்து இங்கிலாந்துடன் இணைந்து பிரிட்டனாக உருவெடுத்தாலும், தனக்கென தனி கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்ட அந்த நாடு, ஏறத்தாழ தனிநாடாகவே செயல்பட்டு வருகின்றது. அங்கும் பிரிட்டிஷ் பவுண்ட்தான் புழக்கத்தில் இருக்கும் நாணயம் என்றாலும், தனியாக ஸ்காட்டிஷ் நாணயங்களும், பண நோட்டுகளும் அங்கு புழக்கத்தில் இருந்து வருகின்றது.
காற்பந்து மற்றும் சில போட்டிகளில் ஸ்காட்லாந்து பாரம்பரியாக தனிநாடாகக் கலந்து கொள்ளும். ஐரோப்பியக் கிண்ணம், உலகக் காற்பந்து போட்டிகளில் பார்த்தால் ஸ்காட்லாந்து தனிநாடாக இடம் பெறும்.
நீண்டகாலமாக, தனிநாடாக வேண்டும் என்ற கோரிக்கைகள் ஸ்காட்லாந்தில் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில், தனிநாடாகப் பிரிவதா இல்லையா என முடிவு செய்ய, ஸ்காட்லாந்து நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
தனிநாடாக ஸ்காட்லாந்து பிரிய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆண்டில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் தீவிரமாக மக்களிடையே பிரச்சாரத்தில் இறங்கியது ஸ்காட்லாந்து தேசிய கட்சி.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியோ பிரிட்டன் ஒன்றாக – ஒரே நாடாக இருக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தது. இவர்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட தொழிலாளர் கட்சியோ, பிரிட்டன் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையில் கன்சர்வேடிவ் கட்சியோடு கைகோர்த்துக் கொண்டது.
தொழிலாளர் கட்சியின் இந்த நிலைப்பாட்டை ஸ்காட்லாந்து மக்கள் ஏனோ ஏற்றுக் கொள்ளவில்லை. காலங் காலமாக, தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு தந்து அந்தக் கட்சி பல தொகுதிகளை ஸ்காட்லாந்து நாட்டில் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த வாக்காளர்கள், தாங்கள் தனிநாடாக பிரியும் கோரிக்கைக்கு தொழிலாளர் கட்சி ஆதரவு தரும் எனப் பெரிதும் எதிர்பார்த்தார்கள்.
இறுதியில் ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் எனக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் பெரும்பான்மை மக்கள் வாக்களிக்க, தற்போது ஸ்காட்லாந்து பிரிட்டனின் ஒரு பகுதியாக தொடர்ந்து வருகின்றது.
ஆனால், இந்த பொதுத் தேர்தலில் ஸ்காட்லாந்து வாக்காளர்களோ, தங்களின் தனிநாடு கோரிக்கைக்கு போராட்டம் நடத்திய ஸ்காட்லாந்து தேசியக் கட்சிக்கு தங்களின் ஆதரவை வாரி வழங்கி விட்டனர்.
அதே சமயத்தில், தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர் கட்சிக்கு வாக்களிக்காமல் பழிவாங்கி விட்டனர்.
விளைவு?
ஸ்காட்லாந்து நாட்டின் மொத்தமுள்ள 59 தொகுதிகளில் 56 தொகுதிகளை ஸ்காட்லாந்து தேசியக் கட்சி வென்றிருக்கின்றது. தொழிலாளர் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வென்றிருக்கின்றது.
தொழிலாளர் கட்சி ஸ்காட்லாந்து நாட்டில் அடைந்த மோசமான தோல்விதான், அது இந்த முறை பிரிட்டனின் தேர்தலில் ஒட்டு மொத்த தோல்வியைச் சந்தித்து ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கான முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
ஸ்காட்லாந்து தேசியக் கட்சியோ பிரிட்டிஷ் அரசியலில் ஒரு முக்கிய இடத்திற்கு உயர்ந்திருக்கின்றது. அதன் தலைவியான நிக்கோலா ஸ்டர்ஜன் (Nicola Sturgeon) பிரிட்டன் அரசியலில் முக்கிய தலைவராக வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றார்.
இனி, நாளைய கட்டுரையில் இரண்டாவது தவணையாக பிரதமராகும் டேவிட் கெமரூன் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுமா? 2020க்குப் பிறகு பிரதமராகத் தொடரப் போவதில்லை என டேவிட் கெமரூன் அறிவித்துள்ள நிலையில் அடுத்த கன்சர்வேடிவ் கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் வரக் கூடிய வாய்ப்புள்ள தலைவர்கள் யார்? என்பது போன்ற விவரங்களைப் பார்ப்போம்.
-இரா.முத்தரசன்
அடுத்து – பிரிட்டன் அரசியல் பார்வை – டேவிட் கெமரூன் தலைமையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா?
பிரிட்டன் தேர்தல் பார்வை (1) : கிரிக்கெட் ஆட்ட இறுதி நிமிடங்கள் போல் பரபரப்பான – விறுவிறுப்பான முடிவுகள்!