நியூயார்க், மே 13 – உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிகாசோவின் ஓவியம் ஒன்று 179 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற பெருமையை இந்த ஓவியம் பெற்றுள்ளது.
உலகப் புகழ் பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோ. தற்போது இவர் உயிரோடு இல்லாவிட்டாலும், இவரது ஓவியங்கள் உயிரோட்டத்துடன் காலங்களைக் கடந்து வாழ்ந்து வருகின்றன.
அந்தவகையில், 1955-ல் பிகாசோ வரைந்த ஓவியம் ‘உமன் ஆப் அல்ஜியர்ஸ்’. இந்த அழகிய ஓவியம் நியூயார்க் கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இது 140 மில்லியன் டாலருக்கு தான் ஏலம் போகும் என்று எதிர்பாக்கப்பட்டது.
ஆனால், ஏலத்தின் முடிவில் அந்த ஓவியம் 179.3 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதன் மூலம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
இதற்கு முன் பிரான்சிஸ் பேக்கன் என்ற ஓவியர் தீட்டிய ” திரீ ஸ்டடீஸ் ஆப் லூசியன் பிராட் ” என்ற ஓவியம் 142 மில்லியன் டாலருக்கு 2013-ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.