கோலாலம்பூர், மே 15 – ஏர் ஏசியா நிறுவனம்,கோலாலம்பூரில் இருந்து தாய்லாந்தின் பட்டாயா நகருக்கு விமான சேவை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் ஜூலை மாதம் 16-ம் தேதி முதல் கோலாலம்பூர்-பட்டாயாவிற்கு, வாரத்தில் நான்கு நாட்களுக்கு விமான சேவை வழங்க உள்ளோம். கோலாலம்பூரில் இருந்து தாய்லாந்தின் ஃபூகெட், பாங்காக், சியாங் மை, ஹாட் யை, கிராபி மற்றும் சுரத் தனி நகரங்களுக்கு அடுத்ததாக பட்டாயாவிற்கு விமானம் சேவை வழங்கப்படுகிறது.”
“தென் கிழக்கு பாங்காக்கில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் இருக்கும் பட்டாயா, கடற்கரை ஓய்விடங்கள் அதிகமுள்ள நகரமாக இருப்பதால் இங்கு சுற்றுலாப்பயணிகளின் வரத்து அதிகமுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் மட்டும் மலேசியா-தாய்லாந்திற்கு பயணித்தவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. அதி வேகமாக வளர்ந்து வரும் மலேசியா- தாய்லாந்து விமான சேவைகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் புதியதாக நகரங்கள் இணைக்கப்படுகின்றன என ஏர் ஏசியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.