கோலாலம்பூர், மே 15 – மலிண்டோ நிறுவனத்தின் போயிங் 737-900ஈஆர் விமானங்களில் இலவச இணைய சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மலிண்டோ நிறுவனம், விமானங்களுக்கு இணைய சேவை வழங்கும் ‘பானாசோனிக் அவியோனிக்ஸ்’ (Panasonic Avionics) மற்றும் ‘ஏரோமொபைல்’ (Aeromobile) நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு வட்டாரத்தில் விமானங்களில் இணைய சேவை வழங்கும் முதல் நிறுவனம் மலிண்டோ என்று கூறப்படுகிறது.
இந்த சேவைக்கு ‘மலிண்டோ வைஃபை’ (Malindo WiFi) மற்றும் ‘மலிண்டோ மொபைல்’ (Malindo Mobile) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வசதி வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மலிண்டோ நிறுவனம் கூறுகையில், “மலிண்டோ ஏர், பானாசோனிக் மூலம் ‘எக்ஸ்கனெக்ட்’ (eXConnect) சேவையையும், ஏரோமொபைல் மூலமாக ‘எக்ஸ்போன்’ (eXPhone) சேவையையும் வழங்க உள்ளது. இந்த சேவைகள் மூலம் பயணிகள் 35,000 அடி உயரத்தில் பறந்தாலும், இணையத்தையும், தங்கள் தொலைபேசி அழைப்புகளையும் ஏற்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.