மரபு சார்ந்த சம்பிரதாயங்களில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் மோடி, நவீன தொழில்நுட்பங்களிலும் அதிக ஆர்வம் காட்டுபவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தனது ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போதும் அங்குள்ள தலைவர்கள் மற்றும் மக்களுடன் தம்படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அவர், சீன சுற்றுப்பயணத்தின் போதும் அதனைத் தொடர்ந்தார்.
நேற்று பெய்ஜிங்கில் அந்நாட்டுப் பிரதமர் லீ-கெகியாங்கை சந்தித்த மோடி, அவருடன் டெம்பிள் ஹேவன் என்ற கோயிலுக்குச் சென்றார். அந்த கோயில் வளாகத்தில் நின்று கொண்டு, கெகியாங்குடன், மோடி தம்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார். மேலும் அதனை அவர், “இது செல்பி நேரம். நன்றி பிரதமர் லீ கெகியாங்” என்ற தலைப்பில் தனது வலைப்பதிவில் வெளியிட்டார்.
உலகின் வலிமையான இரு தலைவர்கள் இணைந்து இருக்கும் இந்த தம்படம் வெளியான ஆறு மணி நேரத்திற்குள், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உள்பட 5 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த புகைப்படத்தினை புகழ்பெற்ற பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ், உலகின் தலைசிறந்த தம்படமாக அறிவித்துள்ளது.