இது தொடர்பாக வெளியாகி உள்ள தகவலின் படி, இந்த ‘ஃப்ளோ’ (Flow) செயலியானது பயனர்களின் தனிநபர் தகவல்களை பாதுகாக்கவும், குறுந்தகவல் அனுப்பவும், மின்னஞ்சல் சேவைகளுக்கும், தொலைபேசித் தொடர்புகளை சேமித்து வைக்கவும் அதனை பராமரிக்கவும் பயன்படும் என்று கூறப்படுகிறது.
அதற்குத் தான் ஏற்கனவே ‘மைக்ரோசாப்ட் அவுட்லுக்’ (Microsoft Outlook) செயலி உள்ளதே என்று கேட்கத் தோன்றும். எனினும், புதிதாக உருவாகி வரும் ஃப்ளோ, அவுட்லுக்கை விட சிறந்தவையாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இந்த செயலியானது காணொளி அழைப்புகளை ஏற்படுத்த உதவும் ‘ஸ்கைப் குவிக்’ (Skype Qik) போன்றும் செயல்படும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம், காணொளி அழைப்புகளுக்காகவும், குறுந்தகவல்களை அனுப்பவும் ஒரே செயலியை பயனர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே மைக்ரோசாப்ட்டின் இலக்கு. ஏற்கனவே ஆப்பிள் கருவிகளுக்கு அவுட்லுக் சிறந்த செயலியாக இருந்து வருகிறது.
ஐபோன் பயனர்கள் ஆப்பிளின் மின்னஞ்சல் செயலியை விட அவுட்லுக்கையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் தற்போது வெளியாக இருக்கும் ஃப்ளோ செயலி, அவுட்லுக்கை விட சிறந்ததாக இருக்கும் என்று கூறப்படுவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.