பியொங்யாங், மே 21 – உலக அளவில் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதிலும், அவற்றை சோதனை செய்வதிலும் முன்நிலை வகிக்கும் நாடாக வட கொரியா திகழ்ந்து வருகிறது.
உலக நாடுகளின் தலைவனாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவே, எந்தவொரு எச்சரிக்கையும், மிரட்டலும் விட முடியாத படி ஆபத்தான நாடாக மாறி இருக்கும் வட கொரியா, தங்கள் அணு ஆயுத ஆராய்ச்சியில் புதிய உச்சம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய அணு ஆயுத ஆராய்ச்சியில் வட கொரியா, அணு ஆயுதங்களை சிறியதாக்கி அவற்றை ஏவுகணைகளுக்கு தகுந்தாற்போல் பாய்ச்சுவதற்கான துல்லியமான விகித்தத்தை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளதாவது:-
“எங்கள் அணு ஆயுதங்களை ஏவுகணைகளுக்கு தகுந்தாற்போல் சிறிய அளவுகளாக்கவும், அவற்றை பரவலாக்கவும் நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தோம். அந்த முயற்சிகளுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.”
“குறுகிய மற்றும் இடைத்தர தொலைவு ஏவுகணைகளில் மட்டுமல்லாது நெடுந்தொலைவு ஏவுகணைகளிலும் இலக்கை சரியாக தாக்குவதற்கான துல்லியத்தை பெற்றுள்ளோம். இதை கூறுவதில் எங்களுக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கொரிய எல்லைப் பகுதியில் கேசாங் என்ற இடத்தில் வட கொரியா மற்றும் தென் கொரியா இணைந்து அமைத்திருக்கும் தொழிற்பூங்காவிற்கு இன்று ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் வருகை தருவதாக இருந்தது. ஆனால், அவர் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானம் பேச வாய்ப்புள்ளது என்பதால் அவர் வட கொரியா வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.