கோலாலம்பூர், மே 21 – கடந்த மாதம் பேஸ்புக் நிறுவனத்தின் மெசெஞ்சர் செயலியில் காணொளி அழைப்புகள் சேவை, சுமார் 18 நாடுகளில் வெளியானது. அமெரிக்கா, ஐரோப்பா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் மட்டும் அறிமுகமான இந்த சேவைக்காக பல லட்சக்கணக்கான பேஸ்புக் பயனர்கள் ஏனைய நாடுகளில் காத்து இருந்தனர்.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் தனது மெசெஞ்சர் செயலிக்கான காணொளி சேவையை அனைத்து நாடுகளுக்கும் இன்று முதல் நடைமுறைப்படுத்தியது. இதற்கான அறிவிப்பினை பேஸ்புக்கின் துணைத் தலைவர் டேவிட் மார்கஸ் இன்று தனது வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் அறிவித்துள்ளதாவது:-
“கடந்த மாதமே, மெசெஞ்சரில் காணொளி அழைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், உலகம் முழுவதும் அந்த சேவை வெளியாவதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கான அனுமதி வழங்கப்படவில்லை. அதன் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சேவை மேற்கத்திய நாடுகளில் பரிச்சயமானது என்றாலும், ஆசியாவிற்கு இது புதியது தான். பேஸ்புக் மெசெஞ்சரில் உள்ள காணொளி அழைப்பிற்கான பொத்தானை பயன்படுத்தி நமது காணொளி அழைப்புகளைத் தொடரலாம். பேஸ்புக் தற்சமயம் 600 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையை பெருக்குவதற்காகவே தற்போது இதுபோன்ற பல்வேறு முயற்சிகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது.