சென்னை, மே 25 – சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னாள் தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார். இதற்கிடையில், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் பல்வேறு குறைகள் உள்ளதாக தீர்ப்பு வெளியான நாள் முதல் தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
மேலும் இந்த வழக்கின் முதல் தரப்பான கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தன. எனினும், கர்நாடக அரசு இதுவரை அது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ள மற்றொருவரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு தனது முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான், திமுக தரப்பு மேல்முறையீடு செய்யும் முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்யும். இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார். அவ்வாறு செய்யாவிடில் இது தவறான முன்னுதாரணமாகி விடும்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வழக்கில் நேரடித் தொடர்பு இல்லாத திமுக கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எப்படி முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.