பன்குரா, மே 25 – மேற்கு வங்கத்தின் பன்குரா கிராமத்தில், கிராமவாசிகள் 40 பேருக்கு அந்த்ராக்ஸ் நோய் பரவி உள்ளதாக உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. நோயின் தீவிரம் பற்றி நன்கு அறிந்துள்ள இந்திய அரசு உடனடியாக 2 மருத்துவக் குழுக்களை அங்கு அனுப்பியுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நோய் தான் அந்த்ராக்ஸ். கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் இந்நோய் கிருமிகள், பின்னர் உயிரியல் ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நவீன மருத்துவ முறைகளால் இந்நோய் தாக்குதல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
இந்நிலையில் தான், மேற்கு வங்கத்தின் பன்குரா கிராமத்தில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து மர்ம நோயின் தாக்குதலால் இறந்து வருவதாக உள்ளூர் வட்டாரங்கள் அரசிடம் தகவல் தெரிவித்துள்ளன. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னால் அங்கு கால்நடைகளும் இறந்துள்ளதால் அந்த பகுதியில் ஆந்த்ராக்ஸ் பரவியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதையடுத்து அங்கு சென்றுள்ள மருத்துவக் குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து வருகின்றன.