கொல்கத்தா : மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரது வீட்டில் தவறி கீழே விழுந்ததால் அவருக்கு நெற்றியில் ரத்தக் காயம் ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் காயங்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தையலும் போடப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேறினார்.
அவருக்கு நேர்ந்த காயங்கள் காரணமாக சில மருத்துவப் பரிசோதனைகளும் அவருக்கு நடத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
மருத்துவமனை படுக்கையில் மம்தா பானர்ஜி படுத்திருக்க, நெற்றிப்பொட்டில் ஆழமான காயத்தோடும், அந்த காயத்திலிருந்து வழியும் இரத்தத்தையும் காட்டும் புகைப்படத்தை அவரின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சமூக ஊடகங்களில் பகிர்ந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பேனர்ஜி கூடிய விரைவில் உடல் நலம் பெற்று பெற வேண்டுமென வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் செய்தி வெளியிட்டார்.