சென்னை : பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களை ஒன்று திரட்டி சந்திப்புக் கூட்டம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அண்மையக் காலமாக ஸ்டாலினுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக “நீட்” தேர்வு குறித்து மத்திய அரசாங்கத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையில் மோதல்கள் வலுத்துள்ளன.
நீட் குறித்த தமிழக அரசின் சட்டமன்றத் தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி விட்டார்.
இதற்கான கண்டனங்கள் தமிழ் நாடு முழுவதும் எதிரொலிக்கின்றன.
இதற்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 13) ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டார்:
“அன்புக்குரிய சகோதரி மமதா பானர்ஜி அவர்கள் என்னைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், ஆளுநர்களின் அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைகளைப் பற்றியும்; அவர்கள் அதிகாரத்தை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் போக்கைப் பற்றியும் தனது கவலையையும் ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்றுகூடிச் சந்திக்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார். மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ள உறுதிப்பாட்டினை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன். எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்புக் கூட்டம் விரைவில் டெல்லிக்கு வெளியே நடைபெறும்.”